“ மகுவா மொய்த்ரா” பன்னாட்டு ஊடகங்கள் உச்சரிக்கும் பெயர்! யாரவர்?

மகுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார். பன்னாட்டு ஊடகங்கள் அனைத்தும் இன்று இவரது பெயரைத்தான் உச்சரிக்கின்றன.. மக்களைவையில் தமது கன்னிப் பேச்சில் பாசக அரசை சரமாரியாக தாக்கி பேசியதால் உலகமே இன்று அவரைப் பற்றி பேசுகிறது. அவருடைய பேச்சில் இருந்து...

”இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்றுள்ளோம். ஆனால் இன்று அந்த அரசியல் அமைப்புச் சட்டமே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது.

புனைவு தேசியவாதம் கட்டமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதுதான் பாசிசத்துக்கான முதல்படி. இந்த தேசம் பாசிசத்தை நோக்கி எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 7 குறியீடுகள் வெளிப்படுத்துகின்றன. அவற்றைத்தான் இன்றைய உரையில் வரிசைப்படுத்த இருக்கிறேன். இந்த தேசத்தில்தான் சட்டவிரோத குடியேறிகள் என கூறி நாட்டின் குடிமக்களை சொந்த வீடுகளில் இருந்து வீதிகளில் தூக்கி எறியும் அவலம் நடைபெறுகிறது.

இந்த நாட்டில் 50 ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ஒரு துண்டு சீட்டையாவது காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமைச்சர்கள் தாங்கள் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்களை காட்ட முடியாத தேசத்தில் ஏழை அப்பாவி மக்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமானது?

மதங்களை பரிசோதனை செய்து பார்க்க முழக்கங்களும் அடையாளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டுப் பற்றை உறுதி செய்வதற்கு என எந்த ஒரு முழக்கமோ எந்த ஒரு அடையாளமோ எதுவுமே கிடையாது. அப்படி ஒரு பரிசோதனையும் கிடையாது. பட்டப்பகலில் கும்பல்களால் படுகொலை செய்யப்படும் துயரம் தொடருகிறது. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பெஹ்லு கானில் தொடங்கி நேற்று ஜார்க்கண்ட்டில் அன்சாரி வரை நீள்கிறது இந்த பட்டியல். இப்பட்டியல் முடிவடையாத ஒன்று.

நாட்டின் ஊடகங்களை இந்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தொலைக்காட்சிகள் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களாக மட்டுமே பரப்புடை செய்கின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை பற்றி அவை கவலைப்படுவது கிடையாது. ஊடகங்களுக்கான விளம்பரங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட தயாரா? ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்க 120 பேர் கொண்ட குழுவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. அரசுக்கு எதிரான கருத்துகள் அவற்றில் இடம்பெறுகிறதா என்பதை இந்த குழு கண்காணிக்கிறது.

இப்போது போலி செய்திகளின் காலம். தேர்தல் என்பது வேலைவாய்ப்பின்மையை முன்வைத்து நடைபெறவில்லை. வாட்சப் செய்திகள், போலி செய்திகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறுகிறது. அரசாங்கத்தைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட பொய்யான செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு அவற்றை உண்மையாக்க முயற்சிக்கும் கோயபல்ஸ் யுக்தியையே கையாளுகின்றனர். 1999-ம் ஆண்டில் இருந்து 36 அரசியல் வாரிசுகளை காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. ஆம் பாசகவும் 31 அரசியல் வாரிசுகளை களமிறக்கியிருக்கிறது என்பதும் உண்மை.

நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது பூதம் வந்துவிடும் என அம்மா பயமுறுத்துவார். இப்போது இந்த நாடே அடையாளம் தெரியாத சில பூதங்களால் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒருவித அச்சநிலை நிலவுகிறது. இராணுவத்தினரின் வீரதீர செயல்களை தனி ஒரு மனிதர் உரிமை கொண்டாடுவது எப்படி சரியாகும்? ஒவ்வொரு நாளும் புதிய புதிய எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காசுமீரில் இராணுவத்தினரின் மரணம் என்பது 106% அதிகரித்துள்ளது.

குடியேற்ற பதிவு, குடி உரிமை திருத்த மசோதா இவை அனைத்தும் ஒரே ஒரு சமூகத்தை குறிவைத்து கொண்டு வரப்படுகிறவைதான், அவர்கள் குடியுரிமை மறுக்கப்படுகின்றனர். நாட்டின் 8.12 கோடி ஏக்கர் நிலத்தைவிட அந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்தான் (அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம்) முக்கியம் என கருதுகிற மக்களவை உறுப்பினர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் அழிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் 66,000 கோடி செலவு செய்யப்பட்டது. இதில் 50 சதவீதம் அதாவது 27,000 கோடி ஒரு கட்சியினரால் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. இருண்டகாலத்துக்கு திருப்பி அழைத்துச் செல்கிறது இந்திய ஒன்றிய அரசு. பள்ளி பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு திருத்தப்படுகின்றன. கேள்வி கேட்பதை சகித்துக் கொள்ளவே முடியாத கூட்டமாக இருக்கிறார்கள்.”

இவ்வாறு மகுவா மொய்த்ரா பேசினார்.

#MahuaMoitra

No comments