பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 10ஆம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆயுதப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டும், காணாமல் போகச் செய்யப்பட்டும் இல்லாதொழிக்கப்பட்ட 146,679 தமிழர்களை நினைவுகூரும் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் 15.05.2019 புதன்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் கொமிற்றி ரூம் 10 என்ற மண்டபத்தில் இந் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் தொழிற்கட்சியின் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின், நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனெல், நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி, நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர் உட்பட பல தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிப் பத்தாண்டுகள் நெருங்கும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாது தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள இவ் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களைப் பங்கேற்குமாறு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

No comments