நீர்கொழும்பில் சிங்கள முஸ்லீம் வன்முறை வெடித்தது



நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்றிரவு அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்களவர்களே இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர்.

வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

சம்பவ இடத்தில் முப்படையினரின் பாதுகாப்பு இருந்தபோதிலும் , அவர்கள் முன்னிலையிலேயே முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன என்று அங்குள்ள ஊர் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்ற போதிலும், முஸ்லிம்களைத்தான் வீடுகளுக்கு செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகின்றனரே தவிர, வன்முறையில் ஈடுபடும் சிங்களவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கவோ அல்லது அவர்களைக் கைதுசெய்யவோ, எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஊர் மக்கள் கவலை வெளியிட்டனர்.

முஸ்லிம் பகுதியான பலகத்துறைக்குச் செல்லும், அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு நிலை பலகத்துறையில் தோன்றியுள்ளது எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

பலகத்துறையில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்புத் தேடி அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கருகில், பெருமளவில் கூடியுள்ளனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

பதற்ற நிலைமையடுத்து நீர்கொழும்பில் அவசர பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்றிரவு 8 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை இந்த ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வன்முறையில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments