67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு

2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, 2015 ஜனவரியில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிறிலங்கா படையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான சில தரவுகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, 2015 ஜனவரிக்குப் பின்னர், சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த 67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் இராணுவ அதிகாரிகள் 15 பேரும், கடற்படை அதிகாரிகள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் 7 பேர் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு அதிகாரிக்கும் ஒரு இராணுவச் சிப்பாய்க்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments