இனவாத பிக்குவிற்கு விடுதலை அளிக்கும் மைத்திரி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பில் வரும் பெப்ரவரி 4ஆம் திகதி விடுவிக்கப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்படும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமை. அந்த நடைமுறையின் கீழேயே
ஞானசார தேரருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி ஆறு ஆண்டுகள் அனுபவிக்கும் வகையில், 19 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

இந்த நிலையில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு சிங்களயே அபி என்ற அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த சனிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ஞானசார தேரரைச் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments