விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல்

மாகாணசபைத் தேர்தல்களை பழைய முறையான விகிதாசார முறையில் நடத்துவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணங்கியிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரிெயல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் ஐ.ம.சு.முவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் நிராகரித்துள்ள நிலையில், அதனை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்தார். இந்தக் குழுவின் அறிக்கை இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

“பிரதமர் தலைமையிலான மீளாய்வுக் குழுவுக்கு இரண்டு மாதங்களே கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த இரண்டு மாத காலத்துக்குள் மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க பிரதமர் தவறிவிட்டார். பாராளுமன்ற சட்டத்தின் படி குறித்த மீளாய்வு அறிக்கையை சபாநாயகர் அல்லது பிரதமர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இந்த அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்”என தினேஷ் குணவர்த்தன எம்பி குறிப்பிட்டார்.

இதுவிடயத்தில் ஏன் இன்னமும் காலதாமதம் உள்ளது என சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம், தினேஷ் குணவர்த்தன எம்பி கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சாபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இந்த விவகாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இது பற்றிய அறிக்கையை சபாநாயகரே ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

இரு தரப்பும் இணங்கும் நிலையில் எல்லைநிர்ணயம் குறித்த மீளாய்வு அறிக்கையை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் கிரியெல்ல மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பிரதி சாபாநாயகருக்குச் சுட்டிக்காட்டினர்.

சபையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் போது சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சியின் பிரதம கொரடா மஹிந்த அமரவீர, சபாநாயகர் நாட்டில் இல்லையென்பதால் அவர் சார்பில் செயற்படுவதற்கான உரிமை பிரதி சாபாநாயகருக்கு இருப்பதாகக் கூறினார். எனினும், இது தொடர்பில் தனக்கு முழுமையாகத் தெரியாது என்றும், சபாநாயகர் நாடு திரும்பியதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாகவும் குறிப்பிட்டார்.

No comments