ஜயங்கன்குளம் படுகொலை மாணவர்களுக்கும் நினைவு தூபி!


முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பகுதியில் 2007ம் ஆண்டு இராணுவத்தினரின்  ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த 8பேருக்கும் தினைவிடம் அமைப்பதற்கு பிரதேச சபையின் தீர்மானத்துடன் நேற்று  பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாலையில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் அதே கிராமத்தைச் சேர்ந்த  4 பள்ளிச் சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழந்திருந்தனர். அவ்வாறு உயிரிழந்த 8 பேரின் உடல்களும் அதேகிராமத்தில் உள்ள குளக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட 8 பேரினது நினைவிடத்தில் ஓர் நினைவுத் தூபி எழுப்பி புனித வழிபாடு செய்ய அவ்வாறு மரணித்தவர்களின் திகதியை காரணம் காட்டி கடந்தகாலங்களில் அனும்மிக்கப்படவில்லை. எனவே இவ்வாறு இறந்த 8 பேரின் இடத்திலும் நினைவுத் தூபி அமைந்து நினைவை அனுஸ்டிக்க வேண்டும். என துணுக்காய் பிரதேச சபையில் கடந்த 15ம் திகதி தீர்மானம் முன்மொழியப்பட்டிருந்த்து.

குறித்த தீர்மானம் தொடர்பில் ஐ.தே.கட்சியின் சார்பு உறுப்பினர் எதிர்ப்பினைப் பதிவு செய்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் குறித்த பகுதி இன்று துப்பரவு செய்து நினைவை கடைப்பிடிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்படுவதுடன் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இப் பகுதியில் நினைவுத் தூபி அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நாகரத்தினம் - மதிகரன் வயது 16 , நாகரத்தினம் - பிரதீபா வயது 16 , கருணாகரன் - கௌசிகா வயது 15 , நித்தியானந்தன் - நிதர்சன் வயது 13 , சந்திரசேகரம் - டிரோயா வயது 16 , ஆகியோருடன் அற்புதராயா - அஜித்நாத் வயது 16 , சண்முகவடிவேல் - சகுந்தலாதேவி வயது 18 , வைரமுத்து - கிருஸ்ணவேனி வயது 26 ஆகிய 8 பேரே குறித்த சம்பவத்தில் மரணித்தவர்களாவார்கள் 

No comments