சபாநாயகர் மீது அசிற் தாக்குதல் முயற்சி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சபாநாயகர் தகவல் வெளியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்குள் அவர் நுழையும் போது மேலதிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய போது, விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால், கருத்து வெளியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி, நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்க 5 நிமிடங்கள் முன்னதாக, 1.25 மணியளவில், தனது செயலகத்தில் இருந்து, சபா மண்டபத்துக்கு செல்லத் தயாராகிய போதே, சபாநாயகருக்கு இந்த தகவல் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது, சபாநாயகரின் ஆசனத்தை  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கைப்பற்றியிருந்ததுடன், வாசலையும் மறித்துக் கொண்டு நின்றனர்.

அதையடுத்தே மாற்றுத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் பக்க வாசல் வழியாக சபாநாயகர் அழைத்து வரப்பட்டார்.

சபாநாயகர் தனது செயலகத்தில் இருந்து வெளியேறியதும், ஒருவர் அங்கு ஓடி வந்து, தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். சபாநாயகர் ஆசனப்பகுதியில் தடுத்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே அந்த தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குழப்பத்துக்கு தயாராகுமாறு விடுக்கப்பட்ட சமிக்ஞை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்துக்குள் கத்தியைக் கொண்டு வந்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்தும், காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்தூள் கலந்த நீர் ஊற்றப்பட்டது குறித்தும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

No comments