புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை - ரணில்


அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கையெடுப்போம். என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் ஐக்கிய தேசிய முன்னணியினரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இறையாண்மை நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றது. அதனை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியினரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஜனாதிபதியை சந்தித்த போது புதிதாக யோசனையை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்றை தினம் நாடாளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டது. இதன்போது சபாபீடத்தையும் , சபாநாயகரின் ஆசனத்தையும் தாமரை அணியினர் கைப்பற்றியிருந்தனர். எவ்வாறாயினும் கோரம் மணி ஒலிக்கவிடப்பட்டதன் பின்னர் சபாநாயகர் அது நிறுத்தப்பட்ட பின்னர் சபைக்குள் வந்தார்.

சபை முறைமைக்கமைய அவரால் சபையில் எந்த இடத்திலும் இருந்து சபை கூட்டமுடியும். அதன்படி அவர் நடவடிக்கையெடுத்திருந்தார். செங்கோலும் அங்கு இருந்தது. நிலையியல் கட்டளைக்கமையவே சகல நடவடிக்கைகளும் இடம்பெற்றது.

இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் எந்த அரசாங்கமும் கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சபாநாயகர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றியை கூறிக்கொள்கின்றோம். இதேவேளை எமது எம்.பிக்கள் சிலரும் மற்றும் ஜே.வி.பி எம்.பியும் காயமடைந்திருந்தார்.

இங்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறி இவர்கள் செயற்பட்டுள்ளனர். நமக்கு மக்கள் பலத்தை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். நாங்கள் எதிர்காலத்தில் எமது அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இருக்கின்றது.  அதன்படி செயற்படுவோம். தற்போது மகிந்த ராஜபக்‌ஷ கார்ட் போர்ட் அரசாங்கம் இல்லை.

No comments