மைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு!


அரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவ தலைவர்களை இன்று அழைத்து தனது பாராட்டை தெரிவித்ததுடன் தான் குறித்த நடைபயணத்தில் பங்கெடுக்க முடியாதிருந்தமை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய கூட்டடமைப்பின் சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளநிலையில் முதலமைச்சர் மாணவ தலைவர்களை அழைத்து சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர். 

பாதுகாப்பு சபைக் கூட்டம் நிறைவடைந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனாதிபதியைச் சந்திருந்தனர்.

இந்தச் சந்திப்பு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காகவே நடந்தது. எனினும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்க்கமான எந்தவொரு உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரையும் அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அடுத்த வாரம் முக்கிய பேச்சு நடத்த இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே முதலமைச்சர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையிலான குழுவினரை சந்தித்துள்ளார். 

No comments