ஏன் சபைக்கு வரவேண்டும்: பொன்ராசா கேள்வி!


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது ஆதரவு பெற்ற வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளரும் இலங்கை கடற்படைக்கு முண்டுகொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் எந்தவித நன்மைகளும் இல்லை, எதற்காக நாம் சபைக்கு வரவேண்டும் என கேள்வி எழுப்பினார் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா. 

வலி.மேற்கு பிரதேச சபையின் 8 ஆவது பொதுக் கூட்டம் நேற்று (17) புதன்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

பொன்னாலையில் கடற்படையினர் தண்ணீர் எடுப்பதற்கு வலி.மேற்கு பிரதேச சபை தொடர்ந்தும் கட்டணம் செலுத்திக்கொண்டிருப்பதுடன் கடற்படை தண்ணீர் அபகரித்துச் செல்வரும் தடுத்து நிறுத்தவில்லை என உறுப்பினர் பொன்ராசா கடும் விசனத்தை முன்வைத்தார். 

தீமானம் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த ஒக்ரோபர் மாதமும் கடற்படைக்கான மின் கட்டணமாக 4 ஆயிரம் ரூபாவை பிரதேச சபை செலுத்தியிருக்கின்றது எனவும் அவர் கூறினார். 

சம்பில்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு பொன்னாலையில் உள்ள இரு கிணறுகளில் இருந்து தினமும் 50 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையான லீற்றர் தண்ணீரைக் கடற்படையினர் எடுத்துச் செல்கின்றனர். அதனால் நிலத்தடி நீர் உவர் நீராகி வருகின்றது. இதனால் கடற்படை தண்ணீர் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த ஜீன் மாத அமர்வின் போது உறுப்பினர் பொன்ராசா பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். 

மேற்படி கடற்படையினர் தண்ணீர் எடுப்பதற்கு வலி.மேற்கு பிரதேச சபை மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா தொடக்கம் 6 ஆயிரம் ரூபா வரை கட்டணம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதைத் தடுத்து நிறுத்துவதுடன் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தை மீளப் பெற்று பொன்னாலையில் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரினார். 
இதையடுத்து, தனியான மின் இணைப்பை ஏற்படுத்துமாறு கடற்படைக்கு வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கடிதம் அனுப்பியிருந்தார். எனினும், ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் அது செயற்படுத்தப்படவில்லை. 
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற சபை அமர்வில் மேற்படி விடயம் தொடர்பாக உறுப்பினர் பொன்ராசா கடும் விசனம் வெளியிட்டார். 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஒக்ரோபர் மாதமும் வலி.மேற்கு பிரதேச சபை கடற்படையின் மின் கட்டணமாக 4 ஆயிரம் ரூபாவைச் செலுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார். 

ஒரு வர்த்தகர் 1000 ரூபா வரி செலுத்தவில்லை எனின் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் பிரதேச சபை இதுவரை பல லட்சக்கணக்கான ரூபா பணத்தை ஏன் கடற்படைக்காகச் செலுத்தியது எனவும் கேள்வி எழுப்பினார். 

சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனின் தான் சபைக்கு வரவேண்டிய அவசியம் இல்லையே எனவும் அவர் கூறினார். 

இதற்கு பதிலளித்த தவிசாளர், இது தொடர்பாக கற்படைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் மீண்டும் ஒரு கடிதம் அனுப்புவதாகவும் தெரிவித்தார். 

No comments