நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார தொலைபேசி உரையாடல்கள் பொருந்துகிறது


முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் 124 தொலைபேசி உரையாடல்களில் 123 உரையாடல்கள் பொருந்துவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அரச பகுப்பாய்வாளர் நாயகம் அனுப்பியுள்ள அறிக்கையின் பிரகாரம் இது உறுதியாவதாக தெரிவித்த சி.ஐ.டியினர் இந்த உரையாடலில் சில அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை மீளப்பெறுவதற்கு எமது நாட்டில் தொழில்நுட்ப அறிவு கிடையாது என பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாகவும் சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீளப்பெற அதனை ஹொங்கொங்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமல் குமார விமானப்படையில் பணியாற்றியுள்ளதோடு அதிலிருந்து விலகாமல் இராணுவத்திலும் பின்னர் அவன்கார்ட் நிறுவனத்திலும் இணைந்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும் சி.ஐ.டி அறிவித்தது.

அவரின் கம்பியூட்டரில் போலியாக ஒரு பெண்ணின் பெயரில் முகநூல் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக அனுப்பப்பட்ட தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அந்தக் கம்பீயூட்டரை அரச பகுப்பாய்வுக்கு அனுப்ப சி.ஐ.டி தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக நாமல் குமாரவின் வாக்குமூலமொன்றை பெற உத்தரவு வழங்குமாறு சி.ஐ.டி முன்வைத்த யோசனையை நீதிமன்றம் நிராகரித்தது.முறைப்பாட்டாளருக்கு சுயவிருப்பத்தின் பேரில் வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்க முடியாது எனவும் நீதவான் லங்கா ஜயரத்ன நீதிமன்றத்தில் அறிவித்தார்.


பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மூன்று தடவைகள் வாக்குமூலம் பெறப்பட்டதாக அறிவித்த சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெறுவது நிறைவடைந்தால் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள இந்திய நாட்டவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இரத்த மாதிரி பெற நடவடிக்கை எடுக்க முயன்றாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தனக்கு எந்தநோயும் இல்லை எனவும் 34 நாட்களாக தன்னை தடுத்து வைத்து கொடுமை செய்வதாகவும் பழுதடைந்த உணவுகளே தருவதாகவும் இந்திய நாட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை கொலை செய்வதற்கு இந்தியா முயல்வதாகவும் இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க அனுமதி வழங்குமாறும் அவர் நீதிமன்றத்தை கோரினார்.இதற்கு நீதிவான் அனுமதி வழங்கினார்.

இந்திய நாட்டவரை நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய பின்னர் அவரை நவம்பர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் பணித்தார்.

இந்திய நாட்டவர் சமர்ப்பித்த 20 பக்க ஆவணத்தை சி.ஐ.டியின் பார்வைக்காக சி.ஐ.டி பிரதிப் பணிப்பாளரிடம் கையளிக்குமாறும் பின்னர் அதனை நீதிமன்ற களஞ்சியத்தில் வைக்குமாறும் நீதவான் அறிவித்தார்.

ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதி செய்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments