ஜநாவில் இலங்கையை காப்பாற்ற கூட்டமைப்பு வருகின்றது?

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் எச்சரித்துள்ளார்.

ஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்; ஊடகவியலாளர்களை  இன்று சந்தித்த அவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் என்ற வகையில் எம்சார்ந்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வரைக்கும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது.

அவ்வாறு இருப்போமானால் வல்லரசு நாடுகள் இங்கு நடந்த இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை மட்டும் அடைவதற்காக ஜ.நாவை பயன்படுத்தும் நிலை உருவாகும். 

2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படாது, நடு வீதியில் நிற்க விடப்பட்டுள்ளோம். 

பாதிக்கப்பட்டவர்களுடைய குரல் தெளிவாக வெளிப்படாமல் இருந்தால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி வல்லரசுகளும் அதன் எடுபிடிகளும் அழிவுகளை தமது தேவைக்காக பயன்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். 

ஏதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை அக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக சர்வதேச விசாரணை என்பது ஜ.நாவினால் 2015 ஆண்டு வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையுடன் முடிவடைந்துவிட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கூறுகின்றார். 

இதன் ஊடாக இனி சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உள்ளக விசாரணையே நடத்த வேண்டும் என்கின்றார். 

இதுமட்டுமல்லாமல் ஜ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தை மீறி, அவ்வரசாங்கம் விரும்பாத ஒன்றை நடமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்து, ஜ.நா மனித உரிமை பேரவை ஒரு பலவீனமான அரங்கு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பேச்சாளர் ஊடாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது. 

மேலும் 2015 ஆம் ஆண்டு ஆணையாளரின் அறிக்கைக்கு பிற்பாடு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கூட்டமைப்பின் கருத்தின்படி வெறுமனே சர்வதேசத்தின் மேற்பார்வையினை மட்டும் வைத்திருக்கத்தான் உதவும் என்று கூறப்படுகின்றது.

ஆனாலும் தமிழ் மக்களுடைய வாக்குகளை இழந்து தேர்தலில் தோற்றுக் கொண்டிருக்கையில்தான் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பு ஒப்புக் கொள்ளுகின்றது.

சொல்ல வேண்டிய இடங்களில் இன அழிப்பினை சொல்லாமல், தேர்தலுக்காகவே கூட்டமைப்பு இனப்படுகொலை விடயத்தை கையிலேடுத்துள்ளது. 

இனப்படுகொலையை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பு அது தொடர்பில் நாங்கள் பேசக்கூடாது என்றும் சொல்கின்றது. 

கூட்டமைப்பு சர்வதே விசாரணை முடிந்துவிட்டது என்பதை ஜ.நா ஆணையாளரின் அறிக்கையினை மேற்கோள்காட்டியே குறிப்பிடுக்கின்றார்கள். ஆனால் அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். 

அந்த அறிக்கையினை பார்த்த பின்னர்தான் முழுமையான சர்வதே விசாரணை தேவை, குற்றங்களை செய்தவர்களை தூக்கில் ஏற்ற சர்வதேச விசாரணை மட்டும்தான் பொருத்தமானது என்று கூறி தமக்கு தேர்தலில் வாக்களித்தால் அந்த விசாரணையை நடத்தி பிழை செய்தவர்களை தூக்கிற்கு அனுப்புவோம் என்று கூறித்தான் மக்களிடம் வாக்கினை கேட்டார்கள். 

அந்த தேர்தலில் வென்ற இரண்டாம் கிழமை ஜ.நாவிற்கு சென்ற கூட்டமைப்பு இலங்கைக்கான கால அவகாசத்தை கோரியிருந்தது அனைவருக்கும் தெரியும்.

தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்கின்றோம் என்று சொல்லும் கூட்டமைப்பு இன்று தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அத்தனை துரோகங்களையும் தங்களுடைய வாயால் ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

எமது கட்சி 2010 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை விடயத்தில் நீதியை நிலைநாட்ட மனித உரிமை பேரவையில் அதிகாரம் இல்லை என்றும், பாதுகாப்பு சபைக்கு இவ்விடயத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. 

ஆனால் பாதுகாப்பு சபையில் சீனா உள்ளதால், இலங்கை விடயத்தை அங்கு கொண்டு செல்லும் போது, இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு சீனா இடமளிக்காது என்று கூட்டமைப்பு அதனை மறுதலித்திருந்தது.


இருப்பினும் கூட்டமைப்பு இன்றுதான் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று கண்டறிந்ததாக நாடகம் ஆடுகின்றது. 

இன்று உள்ள அரசியல் நிலையினை பார்த்தோமானால் சீனாவின் அரசாங்கம் இன்று ஆட்சியில் இல்லை. உண்மையிலேயே இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மேற்கு நாடுகளினதும், இந்தியாவினுடைய ஆட்சியாகும். 

எனவே பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தாது. ஆனால் அதனை கூட்டமைப்பு செய்யப் போவதில்லை. 

வெறுமனே ஜ.நா மனித உரிமை போரவைக்குள் யுத்தக் குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முடக்கும் நடவடிக்கையில்தான் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது. ஆதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

No comments