ஆணைக்குழு வேண்டாம்:திருமலையில் முற்றுகை!


காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிராக திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுக்களில் நம்பிக்கையில்லையென தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள், தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்ட நிலையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வருடங்களை கடந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் ஊடகங்களுடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவினரகளின் கருத்துக்களை மாவட்ட ரீதியில் பதிவு செய்து வருகின்றனர்.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
குறித்த குழுவினர் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வினை திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் பங்கேற்றிருந்தனர்
இதன் போது அமர்விற்கு சமுகமளிப்பதற்காக வருகை தந்திருந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை மண்டபத்தினுள் அனுமதிக்காது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்டப வாயிலை இடைமறித்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் இந்து கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மிராட் ரகீம், ஜெயதீபா புண்ணிய மூர்த்தி, வேந்தன் கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடினார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். எமது ஆணைக்குழு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுவது நியாயமானது.
இதற்கு நீங்கள் கடந்த வந்த வரலாறு காரணமாகிறது.எனவே இந்த சந்தேகங்களை கேட்டு அதற்கான தெளிவுகளை பெற்றுக் கொள்ளவே இன்றைய சந்திப்பை நாம் ஏற்பாடு செய்கின்றோம் உங்களுக்கு நாம் உதவுவதற்காக உங்களின் கருத்துக்கள் பல எமக்குத் தேவைப்படுகிறது.எனவே அந்த பெறுமதியான கருத்துக்களை தாங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தார்..
இந்நிலையில் தமக்கு குறித்த ஆணைக்குழுவின்மீது நம்பிக்கை இல்லை எனவும் தமக்கான நீதி, விசாரணையின் மூலம் கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செபஸ்ரியன் தேவி - திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கம் வர்கள் வலியுறுத்தினார்கள்.
அத்துடன் பல ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தாம் வாக்குமூலம் வழங்கிய போதிலும் தமது உறவுகள் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உயிருடன் இருக்கும் தமது உறவுகளை அரசாங்கம் விடுவிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் வாசலில் ஆர்ப்பாட்டத்தை தொடர மண்டபத்தில் உள்ளோருடனான சந்திப்பு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலின்போது திருமலை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளிடம் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

No comments