தென்னிலங்கை மீனவர்கள் விவகாரம்: ஆதரவளித்த தமிழரசு!

வடமராட்சி கிழக்கில் படையெடுத்துள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேறக்கோரும் உள்ளுர் மீனவர்களது குரல்கள் மீண்டும் சோரம்போயுள்ள தமிழ் தலைகளால் விற்று தீர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவை தென்னிலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து சந்தித்துப்பேசியுள்ளனர்.

சந்திப்பில் தென்னிலங்கை மீனவர்களிற்கும் தொழிலில் ஈடுபட அரச மைச்சர் வலியுறுத்த அதனை மாவை.சேனாதிராஜா,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.சந்திப்பில் கடலட்டை தொழில் குறித்த நிபந்தனைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார்.

தென்பகுதி மீனவர்கள் வடக்கில் தொழில் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு அப்பால் அவர்கள் மீன்பிடி தொழில் நிபந்தனைகளை கடைப்பிடிக்காமையே பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்க காரணமாக அமைகின்றதென சுமந்திரன் விளக்கமளித்துள்ளாராம்.அத்துடன் மீன்பிடி நிபந்தனைகளை மீன்பிடி திணைக்களம் அமுல்படுத்தாதுள்ளது. இதன் காரணமாகவே மீன்பிடி திணைக்களத்தின் செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தை திட்டமிட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் பிரகாரம் தென்னிலங்கை மீனவர்கள தொடர்ந்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கலாமெனவும் அதனை கண்காணிக்க நடவடிக்கை எடுத்தால் போதுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நாவற்குழியில் சிங்களவர்களிற்கு வீட்டுத்திட்டம் வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை தெரிந்ததே.

No comments