பொறுப்பை நிறைவேற்றும் வரை இலங்கைக்கு அழுத்தங்கள் தொடர வேண்டும்! -சர்வதேச மன்னிப்புச் சபை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான யோசனையை கொண்டு வந்த நாடுகள், இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றும்வரை கடுமையான போக்கை முன்னெடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களமும், பென்டகனும் இலங்கைக்கு உதவி வழங்கும்போது நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, எனினும் அதற்கு பின்னர் போர்க்குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், எந்தவொரு விசாரணைக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதை மன்னிப்புச் சபை நினைவுபடுத்தியுள்ளது.

இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களின் மத்தியில் விசாரணை பொறிமுறைகளை ஆரம்பித்தது. இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உட்பட்ட விடயங்களில் மிகவும் மெதுவான நகர்வுகளையே முன்னெடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ந்தும் ஏக்கங்களுடன் காத்திருப்பதாக மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் உறுதிப்பாட்டுக்கு வரவில்லை. எனினும் இலங்கைக்கு சர்வதேசத்தின் இராணுவ பயிற்சிகள், ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இடம் கிடைத்து வருகின்றன. இவை, இலங்கை அரசாங்கத்துக்கு தாம் நிறைவேற்றவேண்டிய மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் அக்கறையை ஏற்படுத்தாது.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனையை கொண்டு வந்த நாடுகள் இலங்கைக்கு உதவும் விடயங்களில் கவனிப்பை செலுத்தவேண்டும்.இலங்கை மனித உரிமை விடயங்களில் தமது பொறுப்பை நிறைவேற்றும்வரை குறித்த நாடுகள் தமது கடுமைப்போக்கை முன்னெடுக்கவேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.

No comments