முதலமைச்சரை சந்திக்கின்றனர் மாணவர்கள்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக வடமாகாண முதலமைச்சரினை சந்தித்துப்பேச்சுக்களை நடத்தவும் அது தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.இச்சந்திப்பில் மதத்தலைவர்களும் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதுக்காக ஒரு சொல்லை பயன்படுத்தினால், ஊடகங்கள் அதனை பிழையாக சித்தரிக்கின்றன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஸ்டிப்பு தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு தொடர்பில், முதலமைச்சரிடம் இன்று (11) வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழினப் படுகொலை நாளான மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை ஒழுங்குமுறையில் மேற்கொண்டுவரும்போது, இடையில் வந்து நாங்கள் செய்ய போகிறோம், நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என யாழ். பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்திருப்பது சரியானதல்ல. ஏன் இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என தெரியவில்லை.


பல்கலைக்கழக மாணவர்கள் இந்நினைவு நாளை நாங்கள் முன்னின்று நடாத்தப்போகின்றோம், அதற்கு உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் என முன்னரே எங்களுடன் கேட்டிருந்தால் நாங்கள் அது தொடர்பாக ஏனைய மாகாண சபை உறுப்பினர்களோடும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

அதேநேரம் வடக்கு மாகாண சபை மூன்றாண்டுகளாக இதனை ஒழுங்காக செய்து வரும் நிலையில் நீங்கள் எல்லோரும் எங்களுடன் வாருங்கள் என  அவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்;நிகழ்வை யாரேனும் செய்யாதிருந்தால் அதனை இவர்கள் எடுத்து செய்திருந்தாலும் அதனை நாம் வரவேற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் இதனை இப்படி செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடைய இந்நடவடிக்கை எனக்கு மன வருத்தை தருகின்றது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments