மே18, வடமாகாணசபை நினைவேந்தல் ஏற்பாட்டில்!


மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாணசபையினால் இம்முறையும் நடைபெறுமென வடக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம், அமைச்சர்களான சர்வேஸ்வரன் , அனந்தி சசிதரன், சிவனேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முள்;ளிவாய்க்கால் நினைவு தினம் எவ்வாறு அனுஸ்டிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று வருடங்களை போன்று இம்முறையும் வடமாகாணசபையே முன்னெடுக்கவேண்டுமென்பது பெரும்பாலானோரது நிலைப்பாடு என தெரிவித்தார்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் காணி தமது உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள பிரதேசசபை வசமுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் எம்முடன் பல தரப்புக்களும் இணைந்து பொதுநிகழ்வாக முன்னெடுக்க ஆலோசித்திருப்பதாக தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு செயற்பாட்டுக்குழுவொன்றை நியமித்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் இக்குழு அனைத்து தரப்புக்களுடனும் எதிர்வரும் 9ம் திகதி தனது அலுவலகத்தில் மீண்டும் ஒன்று கூடி ஆராயவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பலதரப்புக்களும் பங்கெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

No comments