மாலியில் தாக்குதல்களைத் தொடங்கிய ஆயுத குழுக்கள்


மாலியின் தலைநகரான பமாகோவிற்கு வெளியே, காட்டி என்னுமிடத்தில் உள்ள அந்நாட்டின் முக்கிய இராணுவத் தளத்திற்கு அருகே , சனிக்கிழமை அதிகாலையில் இரண்டு பயங்கர வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடும் அப்பகுதியை உலுக்கியதாக ஏஎஃப்பி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் சாலைகளை மறிப்பதற்காகப் படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். காட்டி என்பது இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அஸ்ஸிமி கோயிட்டாவின் சொந்த ஊராகும்.

இதற்கிடையில், வடக்கு மாலியின் மிகப்பெரிய நகரமான காவோவிலும், மத்திய மாலியில் உள்ள செவாரேவிலும் சண்டை நடந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஒரு அறிக்கையில், மாலியின் இராணுவம், அடையாளம் தெரியாத "பயங்கரவாத" குழுக்கள் தலைநகரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள பல நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது, ஆனால் தாக்குதல் நடந்த இடங்களை அது குறிப்பிடவில்லை.


பமாக்கோ மற்றும் பிற நகரங்களில் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சனிக்கிழமை பிற்பகுதியில் இராணுவம் தெரிவித்தது.

No comments