மண் கொள்ளை பற்றி பேசும் ஈபிடிபி?





இலங்கையின் வடபுலத்தில் மணல் மாபியாக்கள் உருவெடுக்கிறார்கள் என்றால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசு. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத, வினைத்திறனற்ற அரசியல் தலைமையே தற்போது அதிகாரத்தில் உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த காலங்களில் மகேஸ்வரி நிதியம் எனும் அமைப்பின் பேரில் பாரிய மணல் மோசடிகளை முன்னெடுத்த நிலையில் நீதிமன்ற விசாரணைகளை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி எதிர்கொண்டுள்ளது.

கொடிகாமத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கச் செல்லும் காவல்துறையினரையே மோதிப் படுகொலை செய்கின்றனர்.

போதைப்பொருள் ஒழிக்கப்படும், சிறப்பான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்த போதிலும், எமது பிரதேசத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் வினைத்திறனற்றவர்களாகவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர் எனவும் ஈழமக்கள் ஜனநாயககட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

காவல்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசரக் கூட்டம் நடத்திய அமைச்சர் சந்திரசேகரன், மணல் மாபியாக்கள் குறித்துப் பேசுகிறார். உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மணல் அகழ்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், நியாயமான விலையில் மக்களுக்கு மணல் கிடைத்திருக்கும். 

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில், 'மகேஸ்வரி நிதியத்தின்' ஊடாக உரிய விதிமுறைகளுடன் நியாயமான விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments