யாழில். சுனாமி ஒத்திகை


யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

உலகளாவிய ஒருங்கிணைந்த சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை நிகழ்வு இலங்கை உட்பட 28 நாடுகளில் கரையோர மாவட்டங்களில் இன்று  புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

இலங்கையில் மாத்தறை, களுத்துறை, மட்டக்களப்பு  மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/401 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது.

இதன்போது ஏற்கனவே கிராமசேவை உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் ஆகிய இரு பகுதியினரையும் பாதுகாப்பாக வெளியேற்றி வடமராட்சி இந்து மகளிர் கல்லுரியில் தங்க வைக்கப்பட்டு வெளியேற்று ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள், பொலிஸ், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம், உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்கற்றனர்.








No comments