முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாளில் வானமும் அழுதது!

18.05.2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கான நீதி கிடைக்காத நிலையில் தமிழ்மக்கள் அனைவரும் நீதிக்கான பாதையில் எமது
தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்துச் செல்கின்றோம் என்பதனை உலகுக்கு பறைசாற்றுமுகமாகவும் முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நெஞ்சில் தாங்கியும் பிரித்தானியாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கினணப்புக் குழுவின் ஏற்பாட்டில் பல தமிழ் அமைப்புக்கள் இனணந்து இப் பேரணியினை நடாத்தியிருந்தனர்.

18.05.2019 மதியம் இரண்டு மணியளவில் Green Park Station இற்கு முன்பாக  ஆரம்பமாகிய இப் பேரணி," Free Free Tamil Eelam", "Justice Delayed Justice Denied",Commonwealth commonwealth suspend Sri Lanka", "Enough time for Sri Lanka End Ties with Sri Lanka"  போன்ற மக்களின் எழுச்சிக் கோசங்களுடன் ஆயிரக்கணக்கான மக்களுடன் பயணித்து மாலை 5  மணியளவில்  பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்றது.

பொதுச்சுடரினை 7 நாட்களும் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்ட  தமிழீழ உணர்வாளர் சுஜீவன்  அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை தமிழ் இளையோர்  அமைப்பைச் சார்ந்த  செல்வி சுஜிஜீவா அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடியினை களமருத்துவப் பொறுப்பாளர் திரு. மனோஜ் அவர்கள் ஏற்றிவைத்தார், அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்விற்கு வருகைதந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் மற்றும் இளையோரின் எழுச்சி உரை போன்றனவும் இடம்பெற்றது.

இவ் எழுச்சி நிகழ்வில் பத்திற்கும் மேற்பட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலின் வலிகள் சுமந்த நடனம் மற்றும் அதிலிருந்து எழுச்சி கொள்ளும் விதமாக அமைந்த பறை இசை நடனம் போன்றன அரங்கேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை நினைந்து பொதுச்சுடரினை ஏற்றியபொழுது 2009 இல் நடைபெற்ற இனப்படுகொலையை ஒரு கணம் நினைந்து வானம் கூட விம்மி அழுதது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ்மக்கள் அனைவரும் ஒருமித்து முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளை எழுச்சிகொள்ளச் செய்தனர்.

அத்தோடு நேற்றைய நாளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதிவேண்டி பிரித்தானிய பிரதமருக்க மனு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலிலே இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைத்து ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று நடுவோம் என்ற தொனிப்பொருளில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. மேலும் முள்ளிவாய்க்காலின் வலிசுமந்த படங்கள் மற்றும் சில சித்தரிப்பு நாடகங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல..! தமிழீழம் அடையும் வரை தேசியத்தலைவரின் பாதையில் தேசிய அடையாளங்களுடன் ஒட்டுமொத்த தமிழினமும் பயணிப்போம் என்ற செய்தியை உலகரியச் செய்திருந்தது இம் மாபெரும் எழுச்சிப்பேரணி.


No comments