ரிஷாத்திற்கு எதிரான பிரேரணை - நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபாநாயகரிடம் நேரில் கையளித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இது தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அது நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பில் முடிவெடுக்கப்படும்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இந்தப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments