Header Shelvazug

http://shelvazug.com/

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குழந்தைகள்

நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் கடைசியாக இருந்த 4 குழந்தைகளும் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அனைத்து அகதிகளின குழந்தைகளும் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமேன் தெரிவித்துள்ளார்.

“2013ல் எங்களது அரசாங்கம் உருவாகிய பொழுது 2000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் நாங்கள் வெளியில் கொண்டு வந்துவிட்டோம்,” என டேவிட் கோலிமேன் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எந்த வகையிலும் ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை பாதிக்காது எனக் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத படகுகளை அனுமதிக்காமல் இருப்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய- அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில்  குழந்தைகள் உள்ளிட்ட 493 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், 265 அகதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த ஆயிரக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில்(பப்பு நியூ கினியா) அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே இந்த அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போதைய நிலையில், நவுருத்தீவில் 394 தஞ்சக்கோரிக்கையாளர்களும், மனுஸ்தீவில் 580 தஞ்சக்கோரிக்கையாளர்களும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

“தஞ்சக்கோரிக்கையாளர்கள் நவுருவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பெரும்  மனநல பாதிப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது,” என கவலை தெரிவித்துள்ளார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோ.

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

No comments