Header Shelvazug

http://shelvazug.com/

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற மசோதா ஆளும் கட்சியின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது!

மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் பல்வேறு நாடுகளின் அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவரும் அந்நாட்டு அரசு, அவ்வாறு தஞ்சம் கோரிய இவர்களை சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளது.

இதனால் பலர் மனநல ரீதியாகவும் உடல்நல ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான சூழலில், இவர்களுக்கு மருத்துவ உதவி அவசியப்படும் பட்சத்தில் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடிப்படையாக கொண்டு கடந்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ வெளியேற்ற மசோதா ஆளும் லிபரல் அரசின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

1. ஓர் அகதி அல்லது தஞ்சக்கோரிக்கையாளரை ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாற்ற இரண்டு அல்லது அதற்கு அதிகமான மருத்துவர்களிடம் மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.

2. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு இந்த இடமாற்றத்தை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு.

எவரை நிராகரிக்கலாம்? சம்பந்தப்பட்ட அகதி மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியை இடமாற்றுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சந்தேகித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியின் மீது குறிப்பிடத்தக்க குற்றப்பதிவுகள் இருந்தால் நிராகரிக்கலாம். இது குறித்த முடிவை 72 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட அகதியின் இடமாற்ற கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவ்விவகாரம் சுதந்திர சுகாதார ஆலோசனைக் குழுவின் பார்வைக்கு செல்லும். இரண்டாவது முறையாக பரிசீலித்து 72 மணிநேரத்திற்குள் தங்கள் முடிவினை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

4. எவருக்கு பொருந்தும்? இந்த மருத்துவ வெளியேற்ற சட்டம் தற்போது நவுரு மற்றும் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிதாக படகுகளில் வருபவர்களுக்கு பொருந்தாது.

5. சம்பந்தப்பட்ட அகதி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அவர் தடுப்புக்காவலிலேயே வைத்திருக்கப்படுவார்.

90 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு எதிராக இப்படியொரு மசோதா நிறைவேறியுள்ளது லிபரல் கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்று தோல்வியாகப் பார்க்கப்படுகின்றது.

தற்போது நிறைவேறியுள்ள மருத்துவ வெளியேற்ற மசோதா ஆஸ்திரேலியாவுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இம்மசோதா நிறைவேறியதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் தீவில் மூடப்பட்ட தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக ஆளும் லிபரல் அரசு அறிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் மனுஸ் மற்றும் நவுருத்தீவு முகாம்களில் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

No comments