ஐதேகவின் கோரிக்கை நிராகரிப்பு!


ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டாரென, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியை சனிக்கிழமை சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம் மற்றும் சரத்​ பொன்சேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை, அமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கவேண்டுமென ஜனாதிபதியிடம், அவர்கள் கோரியுள்ளனர். பிரதமரை எதிர்த்தமையால், இனிமேலும் அரசாங்கத்தில், அமைச்சர்களாக பதவிவகிக்க முடியாது. அவ்வாறு அமைச்சர்களாக வைத்துக் கொள்வதும் தகுதியான செயலல்ல. ஆகையால், அவ்வாறானவர்களைப் பதவியிலிருந்து நீக்கவேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதற்காக மட்டுமே, அவர்களை நீங்கமுடியாது என இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பிரேரணை மீதான விவாதத்தின் போது, தனக்கெதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களையும் நீக்கவேண்டுமென தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அறுவர், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் ஒன்பது பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பர் குறிப்பிடத்தக்கது.

No comments