போர்க்கப்பல் கொள்வனவுக்காக ரஷ்யா சென்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்


போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, கடற்படைத் தளபதி அட்மிரல் ரணசிங்க ஆகியோரும் அடங்கியுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் எஞ்சியுள்ள- தொகையைக் கொண்டு, 158 மில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rostec மூலம் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து, MI 171 HS ரகத்தைச் சேர்ந்த பாவிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட 10 உலங்கு வானூர்திகளையும், இரண்டு IC 76 MD சரக்கு விமானங்களையும், ஆறு, SU 30 போர் விமானங்களையும் கொள்வனவு செய்யவும் சிறிலங்கா திட்டமிட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்காக, SU 30 போர் விமானங்களை ரஷ்யா தயாரித்திருந்தது. பின்னர் அது பெலாரசுக்கு விற்கப்பட்டது.

No comments