ஊழல் வழக்கு! பிரேசில் முன்னாள் அதிபருக்கு 12 வருட சிறை!!

ஊழல் வழக்கு ஒன்றில், பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லுலாவுக்கு (வயது 72) 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்து உள்ளார்.

இந்த நிலையில் தான் சிறைக்கு வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் அவரை சரண் அடைய உத்தரவிட்டது.

ஆனால் அவர் கோர்ட்டு உத்தரவின்படி உடனே சரண் அடையாமல், சா பாவ்லோ நகரில் உள்ள உருக்கு தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் தங்கி இருந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் கூட்டம் சூழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் தன்னை சுற்றிலும் சூழ்ந்திருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தை விலக்கி விட்டு வந்து, காவல்துறை முன் சரண் அடைந்தார். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த காவல்துறையின் வாகனத்தில் அவர் ஏறி அமர்ந்தார். அதைத் தொடர்ந்து அந்த வாகனம் புறப்பட்டது.அவர் கியூரிடிபா நகர சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் லுலா முன்னிலை பெற்று இருந்தாலும், இப்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் அவர், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி விட்டது. 




No comments