About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 29, 2010 / பகுதி: கட்டுரை /

சிறப்பு நேர்காணல் - சிறீலங்கா அரசின் சதித் திட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களும் துணைபோகின்றனர் - கலாநிதி இமம்மானுவேல் அடிகளார் (பாகம்-2)

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து திக்கற்று விக்கித்து பேதலித்து தவித்து நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை.

சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் பிரித்தானியாவின் மிக முக்கிய அரசியற்தலைவர்கள் மட்டுமின்றி வேறுபல அரசியல் இராஜதந்திரிகளையும் அழைத்துவந்து சிங்கள அரசு தமிழர்கள்மீது நடத்திய இனப்படுகொலையை உலகறியசசெய்தது ஒரு நீதிக்கான அழைப்பை உலக அரங்கில் வெளிப்படையாக முன்வைத்த நிகழ்வு என்று வர்ணிக்கலாம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பின்னான அரசியலில் உலக்தமிழர் பேரவை மட்டுமல்ல திரு உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசும் ஈழத்தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில் முக்கியமானது என்று திரு இம்மானுவேல் அடிகளார் இந்த நேர்காணலல் மனம் திறந்து பேசியிருப்பதை நல்ல ஆரோக்கியமான கருத்தாக நாம் கருதுகிறோம். இரு கட்டமைப்புக்களும் வரும் காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அவாவுமாகும்.

இந்த நீண்ட நேர்காணலை நட்பு ரீதியிலான உரையாடலாக எமக்காக பதிவு செய்த படைத்துறை ஆய்வாளர் அருஸ் அவர்களுக்கு ஈழம்ஈநியூஸ் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இனி கலாநிதி இம்மானுவேல் அடிகளாருடனான நேர்காணல்… (இரண்டாம் பாகம்)

கேள்வி: சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களின் நிரந்தர அமைதியா வாழ்வுக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியமானது. இதனை எட்டுவது தொடர்பில் நீங்கள், குறிப்பாக உங்களின் அமைப்பு என்ன திட்டத்தை கொண்டுள்ளது.

பதில்: உலகத்தமிழர் பேரவை இதனை முழுமையாக புரிந்து கொண்டுள்ளது. அதாவது நீர் கூறியது போல நாங்கள் தற்போது மனித உரிமை மீறல்கள் என்றும் அல்லது போர்க்குற்றங்கள் என்றும் அல்லது இலங்கைக்கு எதிரான புறக்கணிப்புக்கள் என்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல் தீர்வு என்பதை தான் நாம் எமது பிரதான திட்டமாக கொண்டுள்ளோம். ஆனால் சிறீலங்கா அரசு எம்மை (புலம்பெயர் மக்களையும், பொருளாதாரத்தையும்) தந்திரமாக சிக்கவைப்பதற்கு எத்தனிக்கின்றது. அபிவிருத்தி என்ற பேர்வையில், மீன் பிடிப்பதற்கு இறால் போடுகின்றனர், வடக்கின் வசந்தம், கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்கா அரசு இதனை மேற்கொண்டு வருகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த திட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது மக்களிலும் சிலர் துணைபோகின்றனர். இது மிகவும் மனவேதனையானது, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வட – கிழக்கில் அபிவிருத்தி எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை தான். வெளிநாட்டு உதவிகளை எல்லாம் தென்னிலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்தி எங்களை புறம்தள்ளிவிட்டார்கள். அதுவும் இனப்பிரச்சனைக்கான ஒரு காரணம்.

வட-கிழக்கு பின்தங்கிய பிரதேசமாகவே இருந்தது. வெளிநாடுகளில் இருந்து கொடுக்கப்பட்ட நிதிகளையெல்லாம் அவர்கள் தென்னிலங்கையின் அபிவிருத்தியில் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் தற்போது திடீரென இனப்பிரச்சனை என்ற வார்த்தையை முற்றாக தவிர்த்துவிட்டு அபிவிருத்தி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். இந்த வார்த்தை வழியாக மேற்குலக நாடுகளுக்கு நன்கு இனிப்பான கவர்ச்சியான திட்டத்தை முன்வைக்கின்றனர், ஏனெனில் எங்கு போர் நடைபெற்றாலும் (உதாரணமாக கொசோவாவோ) மேற்குலக நாடுகள் எதனையும் அழித்துவிட்டு மீண்டும் கட்டலாம் என்ற கொள்கைகளை தான் நடைமுறைப்படுத்துவதுண்டு.

எனவே சிறிலங்கா அரசும் மேற்குலகத்திடம் இருந்து நிதிகளை ஏராளமாக பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான சொற்பதங்களை பயன்படுத்தி வருகின்றது. ஏனவே தான் அபிவிருத்தி என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அரசியல் தீர்வு என்ற வார்;த்தையை பின்தள்ளி பின்தள்ளி அது தொடர்பாக பேசவே அது மறுத்து வருகின்றது.

போர் முடிந்ததும் அரசியல் தீர்வை முன்வைப்பேன் என்று தான் ராஜபக்சா கூறினார் ஆனால் இன்று அனைத்துக்கட்சி குழு தனது 128 கூட்டங்களில் தீட்டின அறிக்கையை கூட அவர் தூக்கி எறிந்துள்ளார். இறுதியாக தற்போது அதனை முஸ்லீம் பிரதிநிதி ஒருவரும் வேறு சிலரும் மீண்டும் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

பேராசிரியர் திஸ்ஸா விதாரணா தலைமையில் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி குழுவின் அறிக்கையை மறைத்துள்ள அரசு இன்று அபிவிருத்தி தொடர்பாக மட்டுமே பேசுகின்றது. அவர்கள் எங்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் இந்த ஏமாற்றும் படலத்தில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். அதற்கு வழி போவது பெரும் தவறு.

எமது தமிழீழப் போராட்டம் தொடரும், இந்த புதிய உலக ஒழுங்கில் நாம் புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பழையவற்றை மாற்றி அமைக்கவேண்டும். அரசியல் தீர்வு தான் எமது பிரதான இலட்சியம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சிலருக்கு இது கடினமாக இருக்கலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதிவளம் மிக்க சிலர் எண்ணுகின்றனர், ராஜபக்சாவிடம் கொண்டுபோய் அவர் காலில் விழுந்து பணத்தை கொடுத்தால் வடக்கு – கிழக்கை அவர் வசந்தமாக்கிவிடுவார் என்று. இது பெரும் தவறு.

அல்லது வர்த்தக இலாபங்களை பெறுவதற்காக தமது பணத்தை அங்கு முதலீடு செய்யவும் அவர்கள் விரும்புகின்றனர். நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். எமது மக்கள் அங்கு மிகவும் துன்பப்படுகின்றனர் என்பது உண்மைதான். இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய உதவிகளை நாங்கள் மேற்கொள்வோம். அது எமது கடமை. ஆனால் அது தோழமையின் ஒரு அடையாளமமாக இருத்தல் வேண்டுமே தவிர அரசாங்கத்தின் பொறுப்பை நாம் எம் மேல் எடுத்தல் ஆகாது.

அரசாங்கம் அவர்களை அழித்துள்ளது, கொன்றுள்ளது எனவே அவர்களை மீளக்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த முழுப்பொறுப்பையும் நாம், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசு எமது மக்களை அழித்துவிட்டு, அவர்களை மீண்டும் அபிவிருத்தி செய்யும் பணிகளை புலம்பெயர் தமிழ் மக்களின் மீது சுமத்திவிட்டு, அபிவிருத்திக்கு என்று அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் நிதிகளை தெற்கில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சதித்திட்டத்தை தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிரு;திக்கு என அரசுக்கு பெருமளவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் புலம்பெயர் மக்களின் பணத்தை உறிஞ்சி எடுத்து அதனை வடக்கு – கிழக்கில் போட்டுவிட்டு, தமக்கு தரப்பட்ட பணத்தை தமது தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே நாம் கவனமாக இருத்தல் வேண்டும், எமது பணத்தை நாம் அங்கிருக்கும் தமிழ் மக்களின் கைகளில் தான் வழங்கவேண்டும் அல்லது அங்கிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால் பேராசையில் ஏமாந்து தெற்கில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுக்காதீர்கள், ஏனெனில் இந்த முதலீடுகளை எமது பகுதிகளில் செய்தால் அது எமது மக்களின் பணமாக இருக்கும்.

அதனைபோலவே அபிவிருத்திக்கும் எமது தமிழ் மக்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் பலப்படுத்த வேண்டும். நாம் சிங்களவர்களுடன் பங்காளிகளாக மாறக்கூடாது. தமிழ் மக்களுடன் பங்காளிகளாகி உங்களின் பணத்தை அங்கு முதலீடு செய்வது நல்லது என நான் கருதுகின்றேன்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பவர்களை அரசும், அனைத்துலக சமூகமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர். மேலும் அவ்வாறு சேரிக்கப்படும் நிதிகளை தாயகத்தில் வழங்குவதற்கும் சுயாதீனமான கட்டமைப்புக்கள் அங்கு இல்லை. அதனை அரசு தனதாக்கிக் கொள்ளும் சாத்தியங்களே அதிகம் உண்டு அல்லவா?

பதில்: நீங்கள் கூறியது போல புலம்பெயர் மக்களால் நட்பு உணர்வுடன் கொடுக்கப்படும் பணத்தை சேர்ப்பதிலும் பிரச்சனைகள் உண்டு, அவர்கள் அது புலிகளுக்கான நிதி என தெரிவித்து புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு அச்ச உணர்வுக்குள் தள்ளியுள்ளனர்.

எனவே பொறுப்பான முறையிலே நிதி சேகரிப்பை அதற்கு ஏற்றவகையில் நாம் அமைத்தக்கொள்ள வேண்டும். ஓன்று தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாக, வழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தை புலம்பெயர் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது இந்த போராட்டத்தின் புதிய கட்டம் என்பது வன்னியல்ல, அதன் களம், அதன் மையம் புலம்பெயர்ந்த நாடுகளிலே செயற்படும் கட்டமைப்புக்கள் தான். புலம்பெயர் நாடுகளில் இதனை முன்னெடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அவைக்கும் நிதி தேவையாக இருக்கின்றது.

அதாவது இந்தக்கட்டம், முள்ளிவாய்காலின் பின்னர் நடக்கும் போராட்டம். அதன் களம் புலம்பெயர்ந்த நாடுகள் தான்;. ஒவ்வொரு நாடுகளின் நிறுவனங்களின் ஊடாகவும் உலக நிறுனவங்களின் ஊடாகவும் இந்த போராட்டம் நடாத்தப்படும்போது இங்கும் செலவுகள் இருக்கவே செய்யும். எனவே அதற்கும் வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்பட வேண்டும், அதனை நாம் தெளிவான உரிய பொறுப்பான முறையிலே மேற்கொள்ள வேண்டும்.

முன்னரைப்போல மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதியை பொறுப்பாளர்களிடம் கொடுக்க மாட்டார்கள். தற்போது பெறப்படும் பணத்திற்கு அவர்களுக்கு பற்றுச்சீட்டு கொடுக்கப்பட வேண்டும். அது நல்ல நோக்கங்களுக்கானது என நாம் அந்த நாட்டு மக்களுக்கும், அரசுகளுக்கும் தெரிவிக்க வேண்டும். எதனையும் நாம் ஒளிவுமறைவாக மேற்கொள்ளக்கூடாது.

எனவே பயங்கரவாதிகள் என எங்கள் மீது இலங்கை அரசு பூசிய சாயத்தை அழித்து, நாம் சுதந்திரமாக, ஜனநாயகத்தை மதிப்பவர்களாக, நேசிப்பவர்கள், சமாதானத்தை விரும்புபவர்களாக எங்களை நாம் நிரூபிக்க வேண்டும்.

அனைத்துலகத்தின் சட்டங்களுக்கு எதிராக நாம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என நாம் எம்மை நிரூபிக்க வேண்டும். அந்த நாடுகளின் கொடிகளையும், எமது ஈழத்தின் கொடியையும் சேர்த்து தாங்கியவாறு நாம் போராட வேண்டும். ஆகையினால் எமது நாட்டில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கும், புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புக்களுக்கும் நாம் பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.

கேள்வி: தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையிலான உறவுகள் எவ்வாறு உள்ளன? அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் என்ன?

பதில்: குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமது கௌ;கைகளை ஒரே குரலில் அந்த நாடுகளின் அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டிய தேவை உண்டு. சில நாடுகளில் குழப்பங்கள் இன்றுவரை இருந்துகொண்டே இருக்கின்றன. அன்று ஒரே இலட்சியம் ஒரே தலைமைத்துவம் என இருந்தபோது பல அமைப்புக்கள் இருக்கவில்லை.

ஓவ்வொரு நாட்டிலும் அந்த தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் அமைப்புக்கள் தான் இருந்தன. ஆனால் இன்று அந்த தலமைத்துவம் இல்லாததால் போலியான கொள்கைகளின் கவர்ச்சிகளினால் அல்லது எதிகளின் துண்டுதலினால் பலரும் தமது கருத்துகளை முன்வைத்து செயற்பட்டு வருகின்றனர். அதாவது ஒற்றுமை குலைந்துள்ளது. எனவே தான் பெரிய நாடுகளில் அதாவது கனடா, லண்டன், பாரீஸ் போன்ற பெருமளவான தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களுக்கும், அந்த அரசுகளுக்கு எமது நோக்கத்தையும், அணுகுமுறைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.

எங்களின் போரட்டத்தின் நோக்கத்தை தெளிவாக அன்னியர்களுக்கு எடுத்துரைக்க கூடிய தலைவர்கள் முன் வரவேண்டும். மேற்குலக நாடுகளும், அனைத்துலகமும் தெரிவிப்பது என்னவென்றால் நீங்கள் எல்லோரும் ஒரே குரலில் கருத்தை தெளிவாக கூர்மையாக தெரிவியுங்கள் அப்போது தான் எமது குரல்கள் கூர்மையாக கேட்கப்படும் என்று.

அதற்காகவே நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த இரு அமைப்புக்களினதும் குடையின் கீழ் வந்து எமது கோரிக்கைகளை ஒரே குரலில் கூறமுடியும். அதனைவிடுத்து நீங்கள் தனியாகவும், சிறிய குழுக்களாகவும் செயற்படுவது எமக்கு ஆபத்தானதாகவே முடியும்.

இன்று நாட்டிலும் எங்களை காட்டிக்கொடுப்பவர்கள், இலட்சியத்திற்கு எதிராக செயற்படுகிறவர்கள் இருப்பது போல வெளிநாடுகளிலும் அவ்வாறானவர்கள் உண்டு. இலங்கை அரசு இது தொடர்பில் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. நாம் இதில் விழிப்பாக நிதானமாக இருத்தல் வேண்டும். நாம் அண்மையில் தெரிவித்தது போல தற்போதைய இலங்கை அரசு வெளிநாடுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதிகளை அனுப்பி வருகின்றது. அங்கு போர் முடிந்துவிட்டது, தற்போது அவர்கள் இங்கு மற்றுமொரு போரை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போரின் புதிய வடிவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எங்கள் மத்தியில் சிலரை அச்சத்திற்குள்ளாக்குவதற்காக இராணுவத்தினரை சிறீலங்கா அரசு பயன்படுத்துகின்றது. அவர்கள் இந்கு வந்து அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களை சோதனைச் சாவடிகளை போல பயன்படுத்துகின்றனர்.

தமிழர்கள் அங்கு செல்லும்போது அவர்களின் கடவுச்சீட்டுக்களை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முடக்கி வைத்துவிட்டு இரகசிய தகவல்களை அறிய முற்படுகின்றனர். எனவே புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களினால் இன்று நடத்தப்படுகின்றது. அதனை நாம் அந்த நாடுகளுக்கு, அந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நாம் நாட்டைவிட்டு வெளியேறி இந்கு வந்த பின்னரும் இலங்கை அரசு எங்களை பயமுறுத்தப்பார்க்கின்றது, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். நாம் அச்சமடைந்தால் அவர்கள் மேலும் எங்களை அச்சறுத்திக்கொண்டே இருப்பார்கள். எனவே புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் இருக்கும் நாடுகளின் சட்டங்களுக்கு பணிந்து சிறீலங்கா அரசின் இந்த குற்றங்களை சுட்டிக்காட்டி தமது பணியை செய்ய வேண்டும்.

இதில் துக்கமானது என்னவெனில் முள்ளிவாய்கால் நிகழ்வுகள் முடிந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் பல நாடுகளில் உள்ள அமைப்புக்கள் ஒன்றாக சேரவில்லை என்பது தான். சில நாடுகளில் நான் பெரிது நீ பெரிது என சண்டைகளும் ஏற்பட்டுள்ளன. நான் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்க வேண்டுமெனில், தமிழ் மக்கள் தம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்களில் இருந்து விடுதலைபெறவேண்டும். எங்களிடம் உள்ள இந்த அடிமைத்தனங்களையும், பலவீனங்களையும் பயன்படுத்தி தான் சிங்கள அரசு எங்களில் பலரை பணம்கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றது.

எனவே இனியாவது இதனை உணர்ந்து இந்த இழிவான செயல்களை மேற்கொள்ளாது ஒற்றுமையாக ஒரே குரலில் அந்தந்த அரசுகளுடன் பேசவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

கேள்வி: அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக மேற்குலகத்தின் தலையீடுகளை சிறிலங்காவில் ஏற்படுத்தாது, சிறிலங்கா அரசிடம் இருந்து ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெறமுடியுமா? (அதாவது ஒரு வெளியாரின் அழுத்தங்கள் இன்றி)

பதில்: இல்லை, ஒருபோதும் இல்லை. ஏனெனில் இதில் நாம் ஆழமான பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். நாம் எல்லா வகையிலும் இலங்கை அரசுகளுடன் பேசியுள்ளோம். நாடாளுமன்றத்தினுள் பேசியுள்ளோம். அரசுடன் பேசியிருக்கின்றோம், வெளிநாடுகளின் உதவிகளுடன் பேசியிருக்கின்றோம்.

ஆனால் நாங்கள் பேசிய பின்னரும் எமது பிரச்சனை என்ன? என்று கேட்டு விளையாடும் அரசுடன் நாம் இனி எதனை பேசமுடியும். இறுதித்தீர்வுக்கு அவர்களும் கையொப்பமிட வேண்டும் என்பது உண்மை, ஆனால் அவர்கள் சர்வதேச அமைப்பின் அழுத்தம் இன்றி, அல்லது சர்வதேசத்தின் முக்கிய நாடுகளின் அழுத்தங்கள் இன்றி ஒருபோதும் தீர்வை கொடுக்க மாட்டார்கள்.

சிறப்பாக இந்தியாவின் பங்கு முக்கியமானது, அதேபோல அனைத்துலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவையும் முக்கியமானவை. அவர்கள் இதில் தொடர்புபட்டுள்ளனர். இங்கிலாந்து எமது பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து காரணமாக இருந்துள்ளது. அமெரிக்கா இன்றைய உலக ஒழுங்கில் முக்கியமான ஒரு நாடு. அதனைபோல இந்தியா எவ்வளவு தான் எமக்கு எதிராக நடந்துகொண்டாலும், அதன் முக்கியத்துவம் தற்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது.

எனவே அனைத்துலகத்தின் அழுத்தங்களை நாம் நன்றாக கணித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசு ஒருபோதும் தனியாக எமது உரிமைகளை வழங்கி எம்மை மனிதர்களாக மதிக்கப்போவதில்லை.

கேள்வி: அரசியல் தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை தாமதப்படுத்திவரும் சிறிலங்கா அரசு வடக்கு – கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வரை அந்த முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லையா?

பதில்: இது தான் மிகவும் சிக்கலான விடயம் ஏனெனில், இலங்கை அரசானது போரில் பாதிக்கப்பட்டவர்கள், அங்கவீனம் அடைந்தவர்கள், வருமானம் இழந்தவர்கள் என தமிழ் மக்களை பணயம் வைத்து, ஏன் முழு தமிழ் இனமுமே இன்று பணயம் வைக்கப்பட்டுத்தான் உள்ளனர். அவர்களை பணயம் வைத்துக்கொண்டு, அவர்கள் சிங்கள புத்த மயமாக்கல்களையும், இராணுவ ஆட்சி முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தபாயாவை பொறுத்தவரையில் தனது ஒரு வார்த்தையில் எல்லாவற்றையும் மாற்றும் சர்வாதிகாரியாக மாறியுள்ளார். ஆனால் இந்த நிகழ்வுகள் அதிக ஊடக கவனங்களை ஏற்படுத்தாததால் பலர் இது தொடர்பில் பேசுவது கிடையாது. எனவே புலம்பெயர்ந்த மக்கள் இதனை அறிந்த பின்னரும் நடவடிக்கையை மேற்கொள்ளாது இருக்கமுடியாது.

எமது நாடுகளில் உள்ள அரசுகளுக்கு சிறீலங்கா அரசு தமிழ் மண்ணையும், மக்களையும் அழித்து கொடூரமான இனஅழிப்பின் இந்த இறுதிக்கட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை தெரிவிக்க வேண்டும்.

அங்குள்ள மாவீரர்களின் கல்லறைகளை அழித்துவிட்டு அதன் மேல் இராணுவ முகாம்களை அரசு அரக்கத்தனத்துடன், அவமதிப்புடன் நிறுவிவருகின்றது. மாவீரர்களின் பெற்றோர்கள் அங்குள்ளபோதே அரசு இவ்வாறு செய்துவருவதை நாம் வெளிநாடுகளுக்கு உரக்கக் கூறவேண்டும்.

நாம் வசிக்கும் அன்னிய நாடுகளில் இரண்டாவது உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகளை எவ்வாறு அவர்கள் மதிக்கின்றனர், எவ்வாறு வருடம்தோறும் அதனை சென்று வணங்குகின்றனர் என்பது இங்குள்ளவர்களுக்கு நன்றாக விளங்கும். எனவே எவ்வாறு சிறீலங்கா அரசு அங்கு தமிழ் மக்களை கொன்றுகுவித்து அந்த மக்களின் கல்லறைகளை அவமதித்து நடக்கின்றது என்பதை நாம் தெளிவாக கூறவேண்டும்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களையும், அமைப்புக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. அவர்களின் கருத்துக்களில் உலக தழிழர் பேரவையான உங்களின் அமைப்பின் பெயரும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
அவர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழ் மக்கள் மீது எடுக்கமுடியுமா?

பதில்: ஊடகங்கள் கூறுவதை நாம் தெளிவாக அவதானிக்க வேண்டும். ஆனால் அவர்கள் (அரசு) இழிவான செயல்களை செய்யத் தயங்கமாட்டார்கள். இலங்கை அரசின் தூதரகங்கள் செயற்படும் முறை இன்று வேறுபட்டது. அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான முறையிலே, தமிழ் மக்கள் மீது பயங்கரவாத்தை ஊக்கிவிப்பவர்கள் என்ற முத்தியை குத்தி செயற்பாடுவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதாவது சுற்றியலை கையில் வைத்திருப்பவனுக்கு எல்லாம் ஆணிகளாகவே தோன்றும் என்பது போல இலங்கை அரசு தமிழரை அடக்கி, ஒடுக்கி அழித்து வருகின்றது. அதனாலேயே எங்களின் மீதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆனால் எமது நாடுகளில் நாம் அந்த நாடுகளின் காவல்துறை அதிகாரிகள் அல்லது அரசுகளுக்கு இதனை தெளிவாக தெரிவிக்க வேண்டும். அதாவது இவ்வாறான இரகசியத்திட்டங்களை வைத்து, சில சமயங்களில் தமிழ் மக்களையும் கூலிகளாக பயன்படுத்தி செயற்படுகின்றார்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டும். சில சமயங்களில் தமிழ் மக்களே காட்டிக்கொடுக்கின்றனர்.

ஆனால் நாம் இதற்கு தயாராக இருத்தல் வேண்டும். இந்த அரசுகள் எதனை செய்தாலும் தமது சொந்த நலன்கள் என ஒன்றை வைத்திருக்கின்றன. அதனைப்பேலவே புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய நாமும் ஒரு சொந்த நலனை கொண்டிருக்க வேண்டும். அதாவது நாம் மனிதர்களாக உரிமைகளுடன், சுதந்திரமாக வாழவேண்டிய தாகம் இருக்கின்றது.

அதனை நாம் மனதில் உறுதிப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு நாம் அச்சப்படத்; தேவையில்லை. நாம் கோழைகளாக மாறினால் தோல்வியை கண்டுவிடுவோம். ஜனநாயக முறையில் நாம்போராடும் போது அச்சம்கொள்ளத் தேவையில்லை. எனவே எல்லோரும் முன்வந்து ஒருங்கிணைந்து போராடுவதே நன்றாக இருக்கும்.

முற்றும்.

ஆக்கபூர்வமான இந்த நீண்ட நேர்காணலை ஒழுங்கு செய்ததில் எமக்கு உதவிய திரு பரணி கிருஸ்ணரஜனி (பெண்ணிய, உளவியல் ஆய்வாளர், பிரான்ஸ்), திரு ச. கிருபாகரன் (பொதுச் செயலாளர், தமிழர் மனித உரிமைகள் மையம், பிரான்ஸ்) ஆகியோருக்கும், தனது நேரத்தை எமக்காக ஒதுக்கிய கலாநிதி இமானுவேல் அடிகளார் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான பயனுள்ள உரையாடல்களை நாம் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளோம் என்பதை எமது வாசகர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

என்றும் அன்புடன்,

லெனின் சுதாகரன் (தளக்கட்டுப்பாட்டாளர்)

நன்றி்:ஈ நியூஸ்

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......