உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றிய பிரெஞ்சு கால்பந்தாட்ட அணியின் 23 வீரர்களையும் அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் இடைநிறுத்துவதாக அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளது.
அணியின் புதிய பயிற்றுநர் லோரன்ட் பிளாங்கின் சிபாரிசுக்கிணங்க இத்தீர்மானத்தை தாம் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டதாக பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடத் தவறிய பிரான்ஸ் அணி வீரர்கள், பயிற்சி முகாமொன்றையும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ணத் தொடரின்போது பயிற்றுநராக கடமையாற்றிய ரேமண்ட் டொமினிக்கை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வீரர் நிகலஸ் அனேல்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இப்பகிஷ்கரிப்பை அவ்வணி வீரர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் அடுத்த மாதம் நோர்வேக்கு எதிராக நடைபெறவுள்ள சினேகபூர்வ போட்டிக்கான அணிக்கு உலகக்கிண்ணத் தொடரில் பங்குபற்றிய 23 வீரர்களும் சேர்க்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணிக்கான வீரர்கள் விபரம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
44 வயதான லோரன்ட் பிளாங்க், ஜூலை 2 ஆம் திகதி பிரெஞ்சு அணியின் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவ்வணியில் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையாக அணியின் 23 வீரர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.