|
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உயரதிகாரிகள் 10 பேருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
|
|
அந்தவகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய இருவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ள அதேவேளை பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) எட்டு பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான கடிதங்கள் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கடமையினை உரிய முறையில் மேற்கொள்ளாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேருக்கே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் எட்டு பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான கடிதங்கள் பொலிஸ் மா அதிபரினால் மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. |