பூவிழி தீ சுமந்தாடட்டும் - இங்கு
பூகம்பம் ஆரம்பம் ஆகட்டும்.
விலங்குகளோடிங்கு கலங்குவதோ? தமிழ்
வீரத்தின் விளைநிலம் உறங்குவதோ?
எழுகவே! தமிழரே! எழுகவே!
அன்னை தந்தை வாழ்ந்ததிந்த நாடு – அவர்
அப்பு ஆச்சி கூட வாழ்ந்த வீடு
அன்புத் தங்கை கோலம் போட்ட முற்றம் - இதை
ஆளவேண்டும் என்பதென்ன குற்றம்;?
எழுகவே! தமிழரே! எழுகவே!
சோற்றுக்காக வாழ்வதிங்கு கேடு - இனிச்
சுதந்திரத்தை தேடி நின்று பாடு
ஆற்றுவெள்ளம் போலெழுந்து ஓடு – களம்
ஆடி வெற்றி கண்ட பின்னர் ஆடு.
எழுகவே! தமிழரே! எழுகவே!
ஆக்கம்: புதுவை இரத்தினதுரை (நினைவழியா நாட்கள்.)