இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ. தொ. கா) இதற்கான எதிர்ப்பு போராட்டத்தினை நடத்தி பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களுக்கு கூறுகின்றது.
பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் வாக்களிப்பிற்கு விடப்பட்டபோது ஜீ.ஜீ. பொன்னம்பலம் உட்பட அ.இ.த.கா ஆதரவாக வாக்களிக்க செல்வநாயகம் உட்பட மூவர் எதிர்த்து வாக்களித்தனர். சட்டம் அங்கீகரிக்கப் படுகின்றது. இதன் பின்னர் தேர்தல் திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டது. இவையெல்லாவற்றின் ஊடாகவும் மலையக மக்களின் வாக்குரிமை முழுமையாகப் பறிக்கப்படுகின்றது.
தமிழர் மத்தியில் பிரிவினைவாத அரசியல்
வளர்ச்சி பெற்ற கால கட்டம்.
1949- தமிழரசுக் கட்சி தோற்றம்.
செல்வநாயகம் தலைமையில் அ.இ.த.கா விலிருந்து வெளிநடப்புச் செய்த குழுவினர் பலர் ஆலோசனைகளின் முடிவில் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியினை உருவாக்குகின்றனர். இதன் பிரதான கொள்கை வட கிழக்கு அடங்கிய தமிழர் தாயகத்தித்ற்கு அதிகாரம் பங்களிக்கப்படும் வகையில் சமஸ்டிக் கோரிக்கையாக இருந்தது. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக சோசலிசக் கொள்கை ஏற்றுக் கொள்;ளப்பட்டது. சாதி, சமய வேறுபாடுகளையும் அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் இது நிராகரித்தது. தொடர் மக்கள் போராட்டங்களாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கின்றது.
1940 களில் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள்.
தமிழ் மக்களின் பாராளுமன்ற அற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முகமாக சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மக்கள் வநசித்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப் படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் (இன்றைய அம்பாறை மாவட்டம்) கல்லோயாத் திட்டம் என்கின்ற நீர்ப்பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டு மாத்தறை அம்பாந்தோட்டைப் பகுதிகளிலிருந்து சிங்கள மக்கள் அரசாங்கத்தினால் அங்கு குடியேற்றப் படுகின்றனர்.
இதன் கீழ் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப் பட்டு அவற்றள் 38 கிராமங்கள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டன. 6 கிராமங்கள் மட்டும் தமிழ் பேசும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
தமிழ் கிராமங்கள் நீர் வசதி குறைந்த அல்லது நீரோட்டத்தின் எல்லையில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. 1959 ல் பின்பு இக் குடியேற்றங்களை மையமாக வைத்து அம்பாறை
1948க்கு முன்னர் இலங்கை இந்தியா போன்ற சகல நாடுகளிலும் வசித்த மக்கள் பிரித்தானியப் பிரஜைகளாவர். எனவே சுதந்திரம் பெற்றபோது இலங்கை அரசாங்கம் தனது பிரஜாவுரிமைக்கான வரைவிலக்கணத்தை கொடுக்கவேண்டியிருந்தது.
மாவட்டம் உருவாக்கப்படுகின்றது. இதைப்போலவே திருகோணமலை மாவட்டத்தில் மீனவர் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், புனித பிரதேசக்குடியேற்றங்கள், முப்படைகளுக்கான குடியேறற்ங்கள் ஆகியன ஆரம்மபிக்கப்படுகின்றன.
இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கங்கள் முன்பு குறிப்பிட்டது போல தமிழ் பிரதேசங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தை மாற்றி அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் தமிழ் மக்களின் தாயகக் கோரிக்கையை நிராகரிக்குமுகமாக வடக்கு கிழக்கைத் துண்டாடுவதும் ஆகும்.
இதன்படி திருகோணமலைப் பிரதேசத்தை வளைத்து ஒரு வில் வடிவத்தில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேல் குறிப்பிட்ட இந்த வில் திருகோணமலையை வடக்கிலிருந்து துண்டாடியது. இதே போல திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையேயுள்ள நிலத் தொடர்ச்சியும் துண்டாடப்பட்டது. மேலும் இக்குடியேற்றப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன.
1956ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியும், தனிச் சிங்களச் சட்டமும்.
ஐக்கிய தேசியக் கட்சியியைத் தோற்கடித்து ஆட்சியில் அமருவதற்கான “24 மணிநேரத்தில் தனிச் சிங்களச் சட்டம் “ என்கின்ற வாக்குறதியுடன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கினறார்.
இதன் அடிப்படையில் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கின்றார். தனிச்சிங்களச் சட்டத்தையும் கொண்டு வருகிறார். 2500 வருடங்களாக சிங்களமே இந்நாட்டின் உத்தியோக பூர்வ மொழியாக இருந்தது எனவும் காலனித்துவ ஆட்சியாளர்களே இதனை மாற்றினர் எனவும் சிங்களத் தலைவர்கள் அறை கூவினர்.
இச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப் படப் போகும் தினத்தில் தமிழ் கட்சிகள் சத்தியாக்கிரகப் போராட்டங்கனை ஏற்பாடு செய்தன.
இதனால் முதல் இரவே பாராளுமன்றத்தைச்சுற்றி முள் வேலிகள் அமைக்கப் பட்டு ஆயுதம் தாங்கிய பொலிசார் சுற்றி வளைத்தனர். ஆனாலும் தமிழரசுக் கட்சியினர் போராட்டத்தைக் கைவிடாமல் பாராளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் தமது தொண்டர்களுடன் கூடுகின்றனர். தங்கள் போராட்டத்தை விளக்கி சிங்களத்தில் எழுதிய துண்டுப்பிரசுரங்களைக் கொடுக்கச் சென்றவர்கள் காடையர்களினால் தாக்கப்படுகின்றனர்.
பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்கவே தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டனர். கொழும்பிலும் பல இடங்களில் தமிழ் மக்களும் தாக்கப்படுகின்றனர். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சத்தியாக்கிரகபோராட்டம் ஆயதமுனையில் கலைக்கப் படுகின்றது. இதன் தொடர்ச்சியாக முதல் முறையாகத் தமிழ் மக்கள் மீதான இனக் கலவரங்கள் கல்லோயாப் பிரதேசத்தில் ஆரம்பித்தன.
இதைத்தொடர்ந்து தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கு மாநாடுகள்,யாத்pரைகள் என்ற போராட்டங்களின் பேரில் ஒரு சுயாட்சித் தமிழரசு என்கின்ற கடசியின் நோக்கத்தை மாற்றி, சுயாட்சித் தமிழரசும்,சுயாட்சி முஸ்லீம் அரசும் என்ற தனது நோக்கங்களை வரையறுக்கின்றது.
1957 ல் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்.
அரசாங்கம் மோட்டார் வாகனங்களின் எண் தகடுகளில் ஸ்ரீ என்கின்ற சிங்கள எழுத்தைப் போடும் சட்ட விதியைக்கொண்டு வருகின்றது. இந் நிலையில் வடக்கு கிழக்கு முழுக்க மோட்டார் வாகனத் தகடுகளில் சிங்கள எழுத்தை அழித்து தமிழ் எழுத்தைப் பொறிக்கும் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. இப்போராட்டங்களில் திருகோணமலையில் கறுப்புக் கொடி கட்ட கம்பத்தில் ஏறிய நடராசன் என்பவர் சிங்களவர் ஒருவரினால் சுட்டுக்கொல்லப்படுகின்றார்.
1957ல் பண்டா செல்வா ஒப்பந்தம்.
தமிழ் மக்களின் போராட்டங்களைக் கண்டு பண்டாரநாயக்கா ஒரு சமரசத்திற்கு வர முயற்சிக்கின்றார் பல இரவுகள் தமிழரசுக் கட்சியுடன் பேச்சவார்த்தைகள் நடத்திய பின்னர் யூலை 26 ம் திகதி பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது.
இதன் படி பிராந்திய சபைகளை தாபிப்பதாக முடிவாகின்றது. இவற்றின் மூலம்
1. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படும்.
2. சிறுபான்மை தேசிய இனத்தின் மொழியாகிய தமிழ் உத்தியோக மொழியாக அங்கீகாரம் பெறும்
3. தமிழே வடக்கு கிழக்கு மாகாண மொழியாக இருக்கும்
4. நாட்டின் எப்பாகத்திலும் தமிழ் மக்கள் தம் கருமங்களை அரசாங்கத்தோடு தமிழில் ஆற்றவும் தம் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் கல்வி ஊட்டி தமிழ் பண்பாட்டில் வளர்ப்பதற்குமான உரிமை பாதுகாக்கப்படும்.
5. பிரதேச சபை சட்டத்தின்மூலம் பெருமளவு பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும்.
தமிழரசுக் கட்சியின் சிறப்பு மாநாட்டில் இந்த உடன் படிக்கை ஆராயப்பட்டு இது இறுதித் தீர்வல்லஎன்றும், இடைக்காலத் தீர்வு மட்டுமே என்றும் வலியுறுத்தப் பட்டது.
இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரியான சுயாட்சித் தமிழ் அரசையும் நாடு முழுவதிலும் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்தையும் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதையும் வலியுறுத்தி கட்சி தொடர்ந்தும் போராடும் என்றும் முடிவாகியது.
ஐக்கிய தேசியக் கட்சி இச்த ஒப்பந்தத்தை காரசாரமாக எதிர்த்தனர். பண்டாரநாயக்கா வடக்கு கிழக்கை தமிழர்களுக்கு விற்றுவிட்டார் என்று ஆர்ப்பாட்டம் எடுத்து ஜே.ஆர் ஜெயவர்த்தன கண்டி யாத்திரையைத் தொடருகின்றார். இந்த யாத்திரை ஆளும் கட்சியினரால் இம்புல்கொடையில் முறியடிக்கப்பட்டது.
பாத யாத்திரையை அரசு முறியடித்தாலும் கூட ஆர்ப்பாட்டங்களின் இலக்க வெற்றி கண்டது.
ஆர்ப்பாட்டங்களின் பின்னர் அரசாங்கம் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை அமுல் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பௌத்த மகா சங்கமும் பிராந்திய சபைகளை எதிர்த்தது. காணி அதிகாரங்கள் சபைகளுக்கு பகிரப்படக் கூடாதென்பது ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் ஒன்றாகச் சேர முடியும் என்பதால் இது தனி நாட்டுக்கு இட்டுச் செல்லலாம் என்பதும் அவர்கள் கருத்தாக இருந்தது.
1958ல் சிங்கள தமிழ் கலவரம்
ஏப்ரல் மாதம் பிக்கு எக்ஸத் பெரமுனவின் சார்பில் பௌத்த பிக்குகள் பண்டா செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன் சத்தியாக்கிரகம் செய்தனர்.
பண்டாரநாயக்கா அவர்களின் முன் ஒப்பந்தத்தை கிழித்தெறிக்கின்றார் ஒப்பந்தம் கிழித்தெறிக்க்ப் பட்டதாக அரசாங்கம் அன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கின்றது.
இதே வேளை நாட்டில் அங்கங்கு தமிழ் எழுத்துக்களைத் தார்பூசி அழிக்கும் நடவடிக்கைகள் செயற்படுத்தப் படுகின்றன.
மலையகத்தில் தொழிலாளர்கள் இதனை எதிர்த்து போராடும்போது போராட்டத்தில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது பிரான்சிஸ் ஐயபவு என்கின்ற இரு தொழிலாளிகள் கொல்லப்படுகின்றனர்;.
இவர்களது மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு எங்கும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப் படுகின்றது.
ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தினால்தான் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது என்று சிங்களத் தலைவர்கள் தலைவர் செல்வநாயகத்தைச் சாடுகின்றனர். ஆயினும் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் எங்கும் தொடருகின்றது. இதில் ஈடுபட்ட பல தொண்டர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்றனர்.
நாடெங்கிலும் சிங்கள இனக் கலவரம் மூளுகின்றது. அரசாங்கத்தினால் பதவி வகித்த ஒரு சில அமைச்சர்களும் சிங்களக் காடையருக்கு தலைமை வகிக்கின்றனர்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர் பாதுகாப்புடன் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப் படுகின்றனர். தமிழ் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களும் தமிழ் மக்களினால் தாக்கப் படகின்றனர். தமிழ் மக்களுக்கு உயிர்ச் சேதமும் உடைமைச் சேதங்களும் ஏற்பட்ட பின்னரே காலம் கடந்து அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை பிரகடனம் செய்து இராணுவத்தை அழைத்து கலவரங்களை நிறுத்துகின்றது.
தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டு அதன் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் பல மாதக் கணக்காய் தடுத்து வைக்கப்படுகின்றனர். அதன் பின்னர் விடுதலையாக்கப்பட்ட தலைவர்கள் தொடர்ந்தும் தங்கள் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுப்பதாக முடிவு செய்கின்றனர்.
வரலாற்று நிகழ்வுகள் தொடரும் காத்திருங்கள்.