மேனி சிலிர்க்கும் எங்கள் தாயகம்.

இந்த சமுத்திரம் தந்திடும் முத்தங்கள்
ஏற்று மகிழ்வது எம்நாடு
சத்தமும் கவிச் சிந்துகள் பாடிடச்
சங்கு முழங்குவ தெம் நாடு.

 

தென்றல் தழுவிடும் செவ்வந்திப் பூவிலே....
தேன்குடித் தாடுவதெ தெம்நாடு
கன்றுகள் தாய்மடி கண்டதும் பாலெல்லாம்
கால்வழி யோடுவ தெம்நாடு.

 

முத்துவிளைவதும் உப்புவிளைவதும்
மூங்கில் வளர்வதும் எம்நாடு
கத்தும் குருவிகள் கானம் இசைத்திட
களனி விளைவது எம்நாடு.

 

ஈழத் தமிழ் நிலம் வாழத் தமதுயிர்
இங்கு கொடுப்பது எம்நாடு
மேளம், உடுக்குடன் ஆடும் கரகத்தால்
மேனி சிலிர்ப்பது எம்நாடு.

 

பூங்குயில் பாடிடும் பூமிசமைத்திடப்
புலிகள் பிறந்தது எம் நாடு
வேங்கை எதிரிகள் பாசறை தேடியே
வீறுடன் பாய்வது எம்நாடு.

 

ஆக்கம்: புதுவை இரத்தினதுரை (நினைவழியா நாட்டகள்)