விழித்தெழுங்கள்.

இது போராடும் காலம்
உங்கள் போர்வைகளை
சுரட்டித் தூரத்தே எறிந்து விட்டு
எழுந்து வாருங்கள்
தலைவனின் பாதையில்
உங்கள் தடங்களும் பதியட்டும்.

 

ஈழத்தாயின் மானம் காக்க
வேண்டியவர்கள் நீங்கள்
மாற்றானொருவன்
துகிலுரிய நினைக்கிறான்
ஈழத்தாயின் சேலையை.
இன்னமா உறக்கம்
உங்கள் விழிகளில்

 

போர்வைக்குள்
சுருண்டு படுத்தால்
ஈழத்தாயின்
மானம் காப்பது யார்?

 

துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்
ஓய்ந்து விட்டதென்பதற்காக
உங்களுக்கு எல்லாமே
கிடைத்துவிட்டதென்றாகிவிட்டதா?
பேரினவாதியின்
நிழல்
யுத்தம் தொடர்கிறது.

 

எமக்கான கலாச்சார பண்பாட்டு
விழுமியங்களைச் சீரழிக்கும்
யுத்தம் தொடர்கிறது
நீங்களும்
உங்களை அறியாமலேயே
அதற்குள்
உள்ளீர்ககப்பட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்.
சூழ்ச்சிப் போர் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது.

 

மறத்தமிழன் மாற்றானின்
அடிமை விலங்குடன்
மானமிளக்கும் கொடுமையான
நிலை வேண்டாம் எமக்கு

விழிப்புடன் இருந்தால்
விடுதலை கிடைக்கும் எமக்கு!


சுமாயிருந்தால் சோறே
கிடைக்காதபோது
தாயகம் மட்டும்
தானாய்க் கிடைத்துவிடுமா?


உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
எரிந்து கொண்டிருக்கும் விடுதலை தீ
அணைந்து விடக் கூடாது.
இல்லையெனில்
எமது இனத்தின் இருப்பே
இல்லாதொழிந்துவிடும்
மறவாதீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்
எழுந்து நில்லுங்கள்.

ஆக்கம்: கல்லடி றொபட் (நெருப்புப் பூக்கள்)