மாவீரர்க்கு காணிக்கை விடுதலையே!!

(மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நாளில்.. 29-01-2010. இலண்டன்)
பேராசிரியர் தீரன்

எத்தர் ஏமாளிகள் பித்தர் என்றெல்லாம்
நித்தமும் எம்மினத்தை நிந்திக்கும் நேரமதில்
முத்துக்குமார் முதலாம் முருகதாசன் வரையில்
இத்தனைக்கும் மேலாக எமதுணர்வை எடுத்துரைத்தார்!
தமிழீழத் தாகம் தீர,
அயலக மண்ணில்
ஆரூயிர் துறந்த
மாவீரர்களுக்கு இணையான
விடுதலை வித்துக்களே!
உலகத் தமிழருக்கே
உரித்தான சொத்துக்களே!
தேகமே தீப்பந்தமாக்கி
தேசத்தின் கண்திறந்த
தியாக அருட்சுடரே!
தில்லிக் காவடிதூக்கிகளைக்
கொழும்பு அடிவருடிகளை
அதிரவைத்த அக்னிஅம்புகளே!
முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை
தரணிக்குத் தமிழீழ நீதிசொன்ன
பதினென் மேல்கணக்கு நூல்கள் நீங்கள்!
சாக்காட்டிலும் புகழ் மணக்கும் பூக்காடுகளே!
வஞ்சகர்கள் வரலாறு ஆவதில்லை
துயிலும் மாவீரர்களே தமிழர் வரலாறு!
வரலாறு படிப்பவர் நாங்கள்
வரலாறு படைத்தவர் நீங்கள்!
செல்லரித்த ஏடுகூட
சேர்க்காது துரோகிகளை!
புல்லரிக்கும் உம்வரலாறு
புரட்டிப்போடும் தேசங்களை!
வாழ்ந்தும் கெடுத்தார் நம் அரசியல்வாதிகள் - நீங்களோ
செத்தும் கொடுத்த சீதக்காதிகள்!
அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டையாம்
தமிழினத்தைப்
புளிமூட்டைபோல் சேர்த்த
புரட்சிப் புலிகளே!
கண்ணீர்ப் பூக்கள் காணிக்கைதர
சாதாரணமல்ல உங்கள் சாவு;
மூவேந்தருக்குப் பின் முகவரி தேடிய
தேசியத் தலைவரின் கார்த்திகைப் பூக்களே!
தொலைத்த இடத்தில் தேடுகிறோம்
தமிழீழம் கிடைக்கும் அர்ப்பணிக்கிறோம்!
மற்றவை தமிழர்க்குக் கெடுதலையே
மாவீரர்க்குக் காணிக்கை விடுதலையே!