வியாழன், ஜூலை 2, 2009 17:13 | பிரித்தானியச் செய்தியாளர்
பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் முட்கம்பி முற்றுகைப் போராட்டம்!
01.07.2009 புதன்கிழமை அதிகாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலையை முட்கம்பிகள் சகிதம் முற்றுகையிட்ட மரியா என்ற பிரித்தானிய பெண்மணி, வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை வெளிக்கொணரும் பதாகைகளை தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

சிங்கள அரசின் வதைமுகாம்களுக்குள் வன்னி மக்களை இட்டுச் சென்ற உலக சமூகம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ள நிலையில், இதுவிடயத்தில் பிரித்தானிய அரசினதும், மேற்குலக மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன், இவ்வாறான போராட்டத்தை தன்னெழுச்சியுடன் மரியா மேற்கொண்டுள்ளார்.

வதைமுகாம்களுக்குள் யூதர்களை அடைத்து கொன்றுகுவித்த உலக சர்வாதிகாரி கிட்லருக்கு எதிரான இரண்டாம் உலக மகாயுத்தத்தில் முதன்மையான பாத்திரத்தை வகித்த வின்சன்ட் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலை முட்கம்பிகளால் முற்றுகையிடப்பட்டமை, பிரித்தானிய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
