வியாழன், ஜூலை 2, 2009 15:57 | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மீள் குடியேற்றங்களை விரைவாகக் மேற்கொள்ளுங்கள்: அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்முறையாகக் கலந்துகொண்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறீலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சமூகம் அளித்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா தலைமையில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய குழுவே பங்கேற்றுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட 3 இலட்சம் தமிழர்களின் அவல வாழ்க்கை குறித்தும் மீள் குடியேற்றம் செய்வது குறித்தும் அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடு இன்றி, இன வேறுபாடு இன்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது எனத் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டபைப்பு சார்ப்பாக குழுவைத் தலைமை தாங்கிய சிறீகாந்தா வன்னியில் முன்னெடுக்கப்பட்ட போரினால் இடம்பெயர்ந்து வவுனியா ஏதிலிகள் முகாங்களில் முடங்கிக் போய் மிகப் பெரிய அவலத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் விரைவாக மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அத்துடன் இவர்கள் மீளக் குடியேற்றிய பின்னர் வடக்கு-கிழக்கு வாழும் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வையும் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சிறீலங்காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஏதிலிகள் முகாங்களுக்குச் சுதந்திரமாகச் சென்று நேரில் பார்வையிட சிறீலங்கா அதிபர் அனுமதி வழங்க வேண்டும.; அவ்வாறு வழங்கினால் மட்டுமே இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என மேலக மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
யாழ். மாவட்ட உறுப்பினர்களான என்.சிறீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், வன்னி மாவட்ட உறுப்பினர்களான சிவநாதன் கிசோர், விநோதாரலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், த.கனகசபை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம், தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜனாப் முகமத் இமாம் ஆகியோர் கூட்டத்தில் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் கலந்துகொண்டுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.