மருத்துவர்களை விடுதலை செய்ய வேண்டும் - தஞ்சாவூரில் மனித சங்கிலி

வன்னியில் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மருத்துவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி தமிழ்நாடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

வன்னியில் இன அழிப்பை எதிர்நோக்கியிருந்த மக்களுடன் இறுதிவரை தங்கியிருந்து அளப்பரிய சேவையாற்றி மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, துரைராஜா, சண்முகராஜா, இளஞ்செழிய பல்லவன் ஆகியோருடன், துணை மருத்துவர் ஒருவரும், தாதியும் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விடுதலையை வலியுறுத்தி தஞ்சாவூர் பிரதான தொடரூந்து நிலையத்துக்க அருகில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த மனித சங்கிலிப் போராட்டம், 11 மணி 30 நிமிடம் அளவில் நிறைவு பெற்றது.

வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களது தியாக உணர்வு அனைத்து மருத்துவர்களுக்கும் இருக்க வேண்டும் என வலியுறுத்திய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவ சங்கத்தினர், இந்த மருத்துவர்களை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவ சங்கத்தின் தலைவர்கள் வெங்கடேசன், பிரதீபா, செயலர் விஜயபாண்டியன் ஆகியோருடன், செயற்குழு உறுப்பினர்கள் சதீஸ்குமார், பிரீத்தி. மனோஜ்குமார், கோடீஸ்வரன், சுந்தர பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பிரபல சட்டவாளர்களான ஏ.ராமமூர்த்தி, ஏ.நல்லதுரை ஆகியோரும் இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவ சங்கம் தெரிவித்துள்ளது.