பசில் ராஜபக்ச சர்சைக்குரிய இந்தோனேசிய ஆச்செ மாநிலத்தில்

ிறீலங்கா அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ச இந்தோனேசியாவின் சர்ச்சை மிகுந்த சுயாட்சி கொண்ட ஆச்சே மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆச்சே மாநிலத்தின் அதிகாரப் பகிர்வு, மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் பற்றி கேட்டறியும் நோக்கில் இவரது பயணம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை போன்று ஆச்சே மாநிலமும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமி ஆழிப்பேரலையில் பாரிய அழிவைச் சந்தித்திருந்தது.

ஆச்சே சென்ற பசில் ராஜபக்ச, அந்த மாநிலத்தின்  ஆளுனர் “இர்வாடி யூசுப்பினை” சந்தித்து பேசியதுடன், சுயாட்சித் தீர்வுகள் பற்றி கற்றுக்கொள்ள ஆச்சே சிறந்த இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்பின் ஒரு பகுதி முடிவுற்றுள்ள நிலையில், 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அமைவாக தீர்வை முன்வைக்க இருப்பதாக அரசு  கூறி வருகின்றது.

இதற்கென அனைத்துக் கட்சிக் குழுவொன்று அமைக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக தீர்வு பற்றி ஆராய்ந்திருந்தது.

அதேவேளை, இதனைக் கலைத்துவிட்டு மற்றொரு “அனைத்துக் கட்சிக் குழுவை” அதிபர் மகிந்த ராஜபக்ச நியமிக்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பசிலின் ஆச்சே மாநிலப் பயணம் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன.

காலத்தினை கடத்தி, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய சிந்தனையை திசை திருப்ப, இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என, அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, சீனாவிற்கான நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு, நேற்று சீனா சென்றுள்ளார்.