நவனீதம் பிள்ளைக்கு மட்டும் சிறீலங்காவும், இந்தியாவும் கண்டனம்?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சிறீலங்காவும், இந்தியாவும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமை விவகாரங்களை சரியான முறையில் நெறிப்படுத்த நவனீதம்பிள்ளை ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக, சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் எப்போதும் கடுமையான விமர்சனங்களை மட்டுமே நவனீதம்பிள்ளை வெளியிட்டு வருவதாகவும், அவரது  நிலைப்பாட்டில் மாற்றம் தேவையென அண்மையில் அவரைச் சந்தித்தபோது சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவனீதம் பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாக மனித உரிமைகள் பேரவையுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளை, தனது பதவியை வீண் பிரயோகம் செய்யக் கூடாது என, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இந்தியத் தூதுவர் கோபினாத் ஆசம்குலங்கர தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பிரேரணை ஐ.நாவில் தோற்கடிப்பட்டுள்ளதால், அந்த முடிவை நவனீதம் பிள்ளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், கோபினாத் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியத் தூதுவர் கோபினாத்தின் செயற்பாடு தமிழ்நாடு தமிழின உணர்வாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.

தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை மட்டுமன்றி, முன்னையை ஆணையாளர் லுயிஸ் ஆர்பரும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்திருந்தார்.

அத்துடன், உலக நாடுகளின் தலைவர்களில் பெரும்பாலாளவர்கள் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வருகின்ற போதிலும், தமிழரான நவனீதம் பிள்ளையை மட்டும் குறிவைத்து, சிறீலங்கா, மற்றும் இந்திய அரசுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.