திங்கள், ஜூன் 29, 2009 13:45 | செய்தியாளர் தாயகன்
இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் மூன்று ஆசிய நாடுகள் - செய்வறியாது மேற்குலகம்
இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் தெற்காசியாவின் மூன்று முக்கிய நாடுகள் போட்டியிட்டு, பனிப்போர் நடத்தி வருகின்றன.
தமிழ் மக்கள் மீது சிறீலங்கா முன்னெடுத்த போருக்கு முண்டு கொடுத்த, அல்லது முன்னின்று நடத்திய இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளே இந்த பனிப்போரில் இறங்கியுள்ளன.
போர் முடிவடைந்து விட்டதால், இப்பொழுது அபிவிருத்தி என்ற பெயரில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது, என்ற போட்டியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க இருப்பதாக இந்தியாவும், ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திப் பணி நிறைவு பெற்றதும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை நாட்டின் அனைத்துப் பகுதியிலும் மேற்கொள்ள இருப்பதாக சீனாவும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், போர் இடம்பெற்ற பிரதேசங்களில் சேதமடைந்துள்ள தொடரூந்துப் பாதைகளைச் செப்பனிடில் என்ற போர்வையில், பாகிஸ்தானும் தமிழர் தாயகப் பகுதிக்குள் களமிறப்பட இருக்கின்றது.
மூன்று நாடுகளிடையேயும் ஆதிக்கப் போட்டியை ஏற்படுத்துவதற்கு, தமிழர் தாயகத்தை போருக்குப் பின்னரும் சிறீலங்கா அரசு பயன்படுத்தி வருவதால், தமிழர் தாயகத்தின் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள 250 கிலோமீற்றர் நீளமான தொடரூந்துப் பாதையை பாகிஸ்தான் புனரமைக்க இருப்பதாகவும, பழுதடைந்த 600 தொடரூந்துப் பெட்டிகளையும் திருத்திக் கொடுக்க இருப்பதாகவும் இன்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 14ஆம் நாள் முதல் 21ஆம் நாள்வரை பாகிஸ்தானின் தொடரூந்துத் திணைக்களத்தின் தலைவர் சமூல் ஹக் கில்ஜி (<!--[endif]-->Samiul Haq Khilji) கொழும்பில் தங்கியிருந்தபோது செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 100 தொடரூந்துப் பெட்டிகளை சீனாவிடம் இருந்து சிறீலங்கா கொள்வனவு செய்திருந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்த ஒப்பந்தம் கைச்சத்திடப்பட்டுள்ளது.