உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் தமிழீழ மக்களே... உங்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு. உங்கள் மனங்களைத் திறப்பதற்கான ஒரு அழைப்பு. நானும் ஒரு தமிழன் என்ற ஓர்மத்துடன் அழுதழுது உங்களுக்கு வரைகின்ற அன்பு மடல். உறவுகளே, நீங்கள் வாழ்ந்த எங்கள் தாயகம் தினந் தோறும் எதிரியால் ஆக்கிரமிக்கப்படுகிறது. எங்கள் வரலாறுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்த குடிதமிழ்க் குடி’ என்று நீங்கள் புகழ்ந்த, புகழ்கின்ற தமிழர்கள் வாழ்ந்த தாயகம் இன்று சிங்களவர்களின் சிங்காரபுரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களால் ஏதும் செய்ய முடியுமா?
எங்கள் தாயகத்தில் நடக்கின்ற ஈனச் செயலை உங்களுக்கு சொல்லாமல் மறைப்பதற்கு நான் விரும்பவில்லை. ஏனெனில் எல்லாம் முடிந்த பின் நீங்கள் நாளை தாயகம் திரும்பி உங்கள் காணி, உங்கள் அப்பா, அம்மா வாழ்ந்த காணி, உங்கள் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் கொடுத்த சீதனக் காணி எல்லாவற்றையும் தேடுவீர்கள். இது எங்கள் காணி என்றுவிட்டு உறுதியையும் கொண்டு வருவீர்கள். ஆனால், பாண்டியன் என்ற பெயரில் உங்கள் காணி உறுதியை நீங்கள் வைத்திருப்பீர்கள். அந்தக் காணியில் பண்டார என்பவன் தனது பெயரில் உறுதியுடன் வாழ்ந்து
கொண்டிருப்பான்.
பிரியந்தினி என்று நீங்கள் உங்கள்? அன்புத் தங்கைக்கு சீதனம் கொடுத்த காணியில் பிரியந்த என்பவன் சொந்த உறுதியுடன் வாழ்ந்துகொண்டிருப்பான். அப்புத்துரை என்ற உங்கள் அப்பாவின் காணியிலும் இதேபோன்று அப்புகாமி என்பவன் வாழ்ந்துகொண்டிருப்பான். அப்போது நீங்கள் என்னையும் குறை சொல்வீர்கள். ஏனெனில், இத்தனையும் எம் தாயகத்தில் நடந்தபோது உன்னால் தடுக்க முடியாவிட்டாலும் எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் என்று நீங்கள் என்னைக் குற்றம் சொல்லக்கூடாதென்பதற்காகவே நான் இத்தனை அராஜகத்தையும் உங்களுக்கு சொல்கின்றேன்.

ஆம் என் உறவுகளே...
இங்கு இத்தனை அராஜகம் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலம் இன்று சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது. வடக்கு-கிழக்கு எங்கணும் இதே நிலைமையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழர்களின் தனித் தமிழ்ப் பூமியாக இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல இடங்களை இன்று சிங்களவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் தற்போது படை முகாம்களும் பௌத்த விகாரைகளும் கட்டப்படுகின்றன. இதனை அண்டிய இடங்களில் அடுத்த வருடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளும் திரை மறைவில் இடம்பெற்று வருகின்றன. யாழ் குடாநாட்டிலுள்ள மண்டைதீவு, வேலணை, காரைநகர், நெடுந்தீவு உள்ளிட்ட தீவுகள், சம்பில்துறை, திருவடிநிலை, சில்லாலை, மாதகல், சேந்தாங்குளம் உள்ளிட்ட கரையோரங்கள் மற்றும் வலி வடக்கில் பெருமளவான பகுதி, கோப்பாய் உட்பட மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடங்கள் மற்றும் கைதடி, நாவற்குழி உட்பட தென்மராட்சியில் பல இடங்கள் என்றவாறு தமிழர் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்திலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வெள்ளரச மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றன. தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளரச மரக் கன்றுகள் இந்த அனைத்து இடங்களிலும் நடப்பட்டிருக்கின்றன. இந்த மரக் கன்றுகளில் அநேகமானவை சில இடங்களில் வாடிவதங்கி நிற்பதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறு வாடி வதங்குகின்ற கன்றுகளைப் பிடுங்கிவிட்டு மீண்டும் புதிய மரக்கன்றுகள் தருவிக்கப்பட்டு நடப்படுகின்றன.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றான சம்பில்துறைப் பிரதேசத்தில் பாரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே நடப்பட்ட வெள்ளரச மரம் கிளை பரப்பி வளர்ந்திருக்கின்றது. அதனை அண்டிய பகுதியில் கடற்கரையுடன் அண்மித்ததாக தென்னிலங்கையில் உள்ளது போன்று பாரிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியாகிய இங்கு சகல வசதிகளுடனும் கூடிய வகையில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வெள்ளரச மரக் கிளையுடன் வந்த சங்கமித்தை என்ற பிக்குணி இங்கே தான் இறங்கியதாக கூறப்பட்டு அதனை நினைவுபடுத்த கடற்கரையுடன் அண்டியதாகத் தடாகம் அமைத்து சங்கமித்தையின் சிலை நிறுவப்பட்டு, அந்தத் தடாகத்தில் மரக் கலம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வரலாற்றை ஆதாரப்படுத்துவதற்காக இங்கே கடலை அண்டியதாக மேலுமொரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலுள்ள விகாரைகள் எவ்வாறிருக்குமோ அதேபோன்ற ஒரு தோற்றத்திலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையில் அமைக்கப்பட்ட சங்கமித்தையின் சிலையொன்றை கடந்த 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ச திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த விகாரைக்கு அண்மையில் உல்லாச விடுதியன்றும் அமைக்கப்படுகிறது. பெரும்பாலும் தென்னிலங்கையிலிருந்து வருகின்ற மக்கள் இங்கே தங்கிச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகாரைக்கு 200 மீற்றர் தூரத்தில் பாரிய கடற்படை முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது. தனியார் ஒருவருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான காணி சுவீகரிக்கப்பட்டு இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் கரையோரம் கடற்படையினரின் கண்காணிப்புக் காவலரண்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு முக்கியமாக கூறப்படவேண்டிய விடயம் என்னவென்றால் இந்த விகாரையின் பல இடங்களிலும் மரப் பலகைகள் அமைக்கப்பட்டு அதில் வரலாற்று ஆவணங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த இடம் ஆரம்ப காலம் தொட்டு சிங்கள மக்களுக்கு சொந்தமானதென்றும் இங்கேயே பௌத்த மதத்தின் மிக முக்கியமான பிக்குணி சங்கமித்தை வந்திறங்கினார் என்றும் பிரதேச வாதம் பொறிக்கப்பட்டு தமிழர்களின் வரலாறுகள் மாற்றிய மைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் கடற்படையினர் மிகப் பெரும் தியாகம் செய்தே இந்த நிலங்களை மீட்டெடுத்தார்கள் என்றும் விளக்கப் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த விகாரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் வந்து செல்கின்றனர். இந்த விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில கடற்படையினர் இங்கு வருகின்ற சிங்கள மக்களுக்கு தமிழரின் வரலாற்றைத் திரிவுபடுத்தும் விளக்கங்களை வழங்குகின்றார். இவற்றைப் பார்க்கின்ற சிங்கள மக்கள் உண்மையிலேயே இதை நம்பி தமிழர்கள் மீது வெறிக்குணம் கொள்கிறார்கள். இதனால் நல்ல மனம் படைத்த குறிப்பிட்டளவான சிங்கள மக்களும் தமிழர்கள் மீது வெறுப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
புலம்பெயர் உறவுகளே...
நான் இவ்வாறு கூறுவது ஏன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் அப்படித்தானே. அன்பானவர்களே சிங்கள ஆட்சியாளர்கள் எங்களை அழித்ததும் போதாதென்று எங்கள் நிலங்களையும் ஆக்கிரமிக்கிறார்கள். பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த நிலங்களில் பௌத்த விகாரைகளை அமைத்துவிட்டு அவற்றை சிங்களவர்களின் பூமி என்று வர்ணிக்கிறார்கள். சிங்கள தேசத்திலிருந்து தாங்களாகவே போக்குவரத்துச் செலவு, உணவு மற்றும் தங்குமிட வசதி போன்றவற்றை வழங்கி, சிங்கள மக்களை வடபகுதியிலுள்ள இவ்வாறான பிரதேசங்களுக்கு அனுப்பி வருகின்ற மகிந்த அரசாங்கம், அவர்களை உசுப்பேற்றியும் அனுப்புகிறது.
இவையெல்லாம் சிங்கள மக்களின் பூர்வீக நிலங்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள். அவர்கள் கடந்த காலங்களில் இங்கு அராஜகங்களை மேற்கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 30 வருடங்களாக சிங்களவர்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியவர்கள். சிங்களவர்களின் நிலங்களையே தமது நிலங்கள் என்று இவர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். இன்று பெரும் இழப்புகளின் மத்தியில் நாம் இவற்றை மீட்டிருக்கிறோம். இதனை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு நீங்கள் முன்வர வேண்டும். என்றெல்லாம் சிங்கள மக்களுக்கும் சிங்களச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் கூறப்படுகின்றன. அவர்கள் மீண்டும் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் இந்த அராஜகங்களைத் தடுத்து நிறுத்த எங்களால் முடியாது என்பதை நான் உங்களுக்கு மிகத் தெளிவாகவே சொல்ல விரும்புகின்றேன். ஏனெனில், தாயகத்தில் இன்று ஏதாவது நடைபெற்றால் அதனை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு சிங்கள அரசும் சிங்கள இனவெறியர்களும் திட்டமிட்டுள்ளனர். சிறிய ஒரு சம்பவம் நடந்தால்கூட அதனைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்கே சிங்களப் பெரும்பான்மை திடசங்கற்பம் பூண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் மிகவும் தெளிவான சிந்தனையுடன் செயற்பட வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகள், வரலாற்றுத் திரிவுபடுத்தல்களுக்கு எதிராக தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளிலேயே பெரும் போராட்டங்கள் மற்றும் கவனயீர்ப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதனைச் செயற்படுத்த நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காகவே இதனை உங்களுக்கு கூறுகின்றேன். சிந்தித்துச் செயற்படுங்கள்.
நன்றி : ஈழமுரசு