கடந்த ஆகஸ்டு 6-ஆம் நாளன்று புத்த மத குருக்கள் அம்பாரை மாவட்டத்தின் அதி பழமையான சிரி சித்தி வினாயகர் கோயிலின் முதன்மை தெய்வமாக வழிபடப்படும் பிள்ளையார் சிலையை அகற்றியுள்ளனர். அவ்வட்டார பகுதியின் சுமார் 200 சைவ குடும்பங்களின் வழிபாட்டு தளமாக திகழ்ந்துவந்தது இந்த சிரி சித்தி வினாயகர் கோயில்.

இரு மாதங்களுக்கு முன்னர், பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு சைவ கோயிலின் மூலஸ்தனத்திலிருந்து பிள்ளையார் சிலை புத்த மத குருக்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே கொடுமை மட்டக்களப்பு, புனானை மாவட்டத்திலும் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
புத்த மத குருக்களும் அவர்தம் குடும்பத்தினர்களும் அப்பகுதிவாழ் தமிழ் குடியேரிகளுக்கு பெரும் துன்பங்களை இழைத்துவருகின்றனர்.
முன்னதாக, இக்கோயில் பனாமா சந்தியில் அமைந்திருக்கும் புத்த விகாரா அருகே இருந்தது. பின்னர், அக்கோயில் புதிய இடத்திற்கு மாற்றலானது. பழைய கோயிலின் பிள்ளையார் சிலை புதிய கோயிலில் நிறுவப்பட்டு குடமுழக்கு சடங்கு முறைகளும் செய்யப்பட்டது.
இந்த மாற்றத்திற்கு பின், புத்த விகாராவை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வந்தது. இதனை கண்டு சினங்கொண்ட விகாராவில் பொறுப்பு வகித்து வந்த மத குருக்கள் கோயிலின் முதன்மை வழிபாட்டு தெய்வமான பிள்ளையாரை முன்பிருந்த கோயிலுக்கே மாற்ற முற்பட்டிருப்பதனை சைவ பக்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காவல் துறையினரிடம் இது குறித்து புகார் தொடுத்தும் அதனை கண்டிக்க அவர்கள் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பக்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வெற்றிக்குமரன் தமிழரசி