கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சியை விற்பனைக்காக கடைக்கு எடுத்துச் சென்றவரிடம் இலஞ்சமாக ஆயிரம்ரூபா வாங்கிய காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை இறைச்சிக்கடைக்காரர்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நற்பிட்டிமுனையில் மாட்டிறைச்சி வெட்டி கல்முனை பாலிகா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இறைச்சி விற்பனைக்கடைக்கு சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றபோது குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு காவல் கடமையில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் இறைச்சியை எடுத்துச்சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி இவ்வாறு இறைச்சியை எடுத்துவரமுடியாது என பயமுறுத்தி 10 ஆயிரம்ரூபாவை இலஞ்சமாகக் கேட்டுள்ளார். இதன்பின்னர் இறைச்சியை எடுத்துச் சென்றவர் ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இறைச்சிக்கடைக்கு தாமதமானதற்கான காரணத்தை கடை முதலாளி கேட்டபோது கான்ஸ்டபிள் இலஞ்சம் வாங்கிய சம்பவத்தை கூறியதையடுத்து இறைச்சி விற்பனைக்;கடை காரர்கள் உடனடியாகப் பாடசாலைக்குச் சென்று இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை மடக்கிப்பிடித்து காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் இலஞ்சமாகப்பெற்ற ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்