அம்பாரையில் நீடிக்கும் கொடுமை.
அம்பாரை மாவட்டத்தின் பதினைந்து தொகுதிகளை சார்ந்த சுமார் 3 500க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இன்னமும் திக்கற்ற நிலையிலேயே இருப்பதாக அம்மாவட்டத்தின் பொது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்மாதுரை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பட்டு, பொத்துவில், கல்முனை, சாய்ந்தமருது, இரக்காமம், ஆலையடிவெம்பு, காரைத்தீவு, நாவிதன்வெளி, திருக்கோயில், உஹானா மற்றும் லகுகாலா என பதினைந்து தொகுதிகளின் கிராமங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஏப்ரல் 1967-ஆம் நாள் முதற்கொண்டே, 6 500 ஏக்கர் நெல் வயல்கள், 3 500 ஏக்கர் தென்னந்தோப்புகள், கரும்பு விளைச்சலுக்கான 2 000 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு தொடங்கி, அவ்வட்டாரங்களின் சைவ கோயில்கள் அழிக்கப்பட்டு ஆங்காங்கே புதுப்புது புத்த விகாராக்கள் எழும்பியவண்ணமே உள்ளன. இவையாவும் இலங்கை சிறப்பு பணிக்குழு அதிகாரிகளின் ஆதரவின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆதாரங்கள் புலப்படுத்தியுள்ளன.
இதனிடையே, அப்பாவி தமிழ் மக்களிடமிருந்து சட்டவிரோதமாக கைப்பற்றிய நிலங்களையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை இஸ்லாமிய காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். தங்கள் பாரம்பரிய கிராமங்களிலிருந்து தப்பி வந்த தமிழ் மக்கள் அமைச்சரின் உத்தரவாதத்திற்கு ஏற்ப மீண்டும் அவர்களுக்கு நிலங்கள் கிடைக்குமா என கேள்விக்கணைகள் தொடுத்துள்ளதாக ஆதாரங்கள் மேலும் வெளிவந்துள்ளன.
1983-ஆம் ஆண்டில் தமிழர்கள் சிங்கள குண்டர் கும்பல்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1985 மற்றும் 1990 உள்ளிட்ட ஆண்டுகளில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம் நிலவியுள்ளது. 2007-ஆம் ஆண்டில், கிழக்கு மாகாணம் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பயம் மற்றும் அச்சுறுத்தல்களின் காரணமாக, சில தமிழ் குடும்பங்கள் தங்களின் நிலங்களை இலங்கையர்களுக்கே விற்கவும் செய்துள்ளனர்.
வெற்றிக்குமரன் தமிழரசி