About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 26, 2012

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பும் கருணாநிதியின் டெசோ மாநாடும் - -இதயச்சந்திரன்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடைச் சடங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை நியாயப்படுத்தும் வகையில் பல காரணிகளை இந்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளது.இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் தமிழீழக் கோரிக்கை அச்சுறுத்தலாக அமையுமென்பதே இதன் சாராம்சம்.

இதில் தேசிய ஒருமைப்பாடு என்கிற வார்த்தைப் பிரயோகம் விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் முன்னிறுத்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ஈழவிடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரித்து விடுமோ என்கிற கற்பிதத்தில் உருவாக்கப்பட்டது.

ஆனால் இலங்கையுடன் ஒரு மூலோபாய உடன்படிக்கையை எட்டுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு 80 களில் உதவி செய்யும் போது இந்த இறைமைப் பிரச்சினையோ அல்லது ஒருமைப்பாட்டுச் சிக்கலோ இந்தியாவிற்கு ஏற்படவில்லை.
ஆகவே ஈழவிடுதலைப் போராட்டத்தை அழுத்தக் கருவியாகப் பயன்படுத்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதோடு தனது நலனைச் சாதித்துக் கொண்டது இந்தியா.

2006இற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் சீனாவின் உள்நுழைவு போன்றவை அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவிருந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை மேற்கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்ததோடு வெளிப்படையாகவே இலங்கை சார்பு நிலைமை எடுக்க வைத்தது.

ஆனாலும் 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பின்னர் போட்டி வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவை இலங்கை விவகாரத்திலிருந்து தனிமைப்படுத்தும் அளவிற்கு சென்று விட்டதைக் காணலாம். இன்று இராணுவ மயமாகும் இலங்கையின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பு பல எச்சரிக்கைகளை இந்தியாவிற்கு விடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே தாம்பரத்திலும் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாம்களிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதன் ஊடாக படைத் தரப்போடு ஒரு சுமுகமான நீண்ட எதிர்கால நலன் சார்ந்த உறவினை ஏற்படுத்திக் கொள்ளலாமாவென்று இந்தியா பரீட்சித்துக் பார்க்கிறது. வேற்று நாட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் வல்லரசுகள் இரு தரப்பு நலன்களை வளர்த்தெடுப்பதற்கு இதனைப் பயன்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.

இவை தவிர இந்தியாவின் அதிவேக போர்க்கப்பலொன்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள செய்தி இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. தமது மண்ணில் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதும் அவர்கள் மண்ணில் அவர்களோடு பரஸ்பர உறவினை ஏற்படுத்துவதும் இதன் ஒரு அங்கமாகும். ஆனாலும் இலங்கை அரசோடு படைத் தரப்பு உறவினைப் பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிக்கு தமிழகம் தடைக்கல்லாக இருப்பது இந்திய மத்திய அரசிற்கு விசனத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலைப்புலிகளின் மீதான தடை நீடிப்பு ஊடாக தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை அடக்க தேசிய ஒருமைப்பாடு இறைமை என்கிற அஸ்திரங்களைப் பிரயோகிக்க இந்தியா முற்படுவதை அதன் நலன் சார்ந்து புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் பிராந்திய மூலோபாய நலன் முழு இலங்கையையும் சார்ந்து இருக்கிறது.
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படாதவகையில் தேசிய இன முரண்பாட்டிற்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற இந்தியாவின் பார்வை இதனடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படுவதைக் காணலாம். அதேவேளை வட-கிழக்கில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்துப் பேசுவதை இந்தியா தவிர்ப்பது ஆச்சரியமான விடயமல்ல.

இருப்பினும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் அண்மைக் காலமான பலவீனமடைவதை இந்திய உயரதிகாரிகளின் இலங்கைப் பயணங்கள் மறைமுகச் சுட்டிக்காட்டுவதையும் நோக்க வேண்டும்.இரு தரப்பு உறவு நிலை முறிவு நிலையினை எட்டாதவாறு பார்த்துக் கொள்வதற்கு இப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தெற்காசியாவில் விரிவடையும் சீன ஆதிக்கம் குறித்து இந்தியா கவலையடைவதை நேபாளம் மற்றும் பூட்டான் தூதுவர்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அழைத்து கலந்துரையாடியது புலப்படுத்துகிறது.

நேபாளத்தில் 36 மாலைதீவில் 8 இலங்கையில் 12 பங்களாதேசில் 9 என்கிற வகையில் பாரிய முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரர வல்லரசாகத் திகழும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள சில அவசர நகர்வுகளை இந்தியா மேற்கொள்ள முயற்சிக்கிறது.

இந்நிலையில் 1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.இந்திய மத்திய அரசின் ஆட்சியதிகாரத்தில் பங்கு வகிக்கும் கருணாநிதி அவர்கள் இலங்கை-இந்திய இராஐதந்திர உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் டெசோவை ஏன் தூக்கிப் பிடிக்கின்றார் என்கிற கேள்வி எழுகின்றது.

இவரின் ஈழத்தமிழர்களின் பால் கொண்ட பெரு விருப்பினை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் போது நாம் கண்டு கொண்டோம். அப்போது டெசோ அமைப்பு கோமா நிலையில் இருந்தது.போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று பொய்யுரைத்த கருணாநிதி இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தமிழக மக்களுக்கு மூடி மறைத்தார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.

இந்திய மத்திய அரசின் பிராந்திய நலனிற்கு துணை போக வேண்டிய அவசியத்தால் சொந்த இனம் அழிக்கப்படுவதை அவர் அனுமதித்தார் என்பது தான் உலகத் தமிழினத்தின் கருத்து. இப்போதும் அதே பிரச்சினை தான் அவருக்கு.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வி இடைத்தேர்தல்களில் கூட்டுச் சேராமல் தனித்து நின்று வெற்றி வாகை சூடும் ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை காங்கிரஸை தமிழகத்தில் செல்லாக் காசாக்கிய சீமானின் திடீர் எழுச்சி என்பன நிரந்தமான அரசியல் சரிவினை தி.மு.க.விற்கு ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தால் ஈழப்பிரச்சினையை டெசோ ஊடாக தூக்கிப் பிடித்து சரியும் செல்வாக்கை நிமிர்த்த முயல்கிறார் கருணாநிதி.

அதேவேளை காங்கிரசிற்கும் இம்மாநாடு தேவைப்படுகிறது.

தி.மு.க. தனது மக்கள் செல்வாக்கினை அதிகரித்தால் மட்டுமே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதனோடு கூட்டுச் சேர்ந்து சில ஆசனங்களையாவது பெறலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.அத்தோடு இந்த டெசோ மாநாட்டின் ஊடாக விலகிச் செல்லும் இலங்கை அரசிற்கு அச்சுறுத்தும் செய்தி ஒன்றினைக் கொடுக்கலாமெனவும் மத்திய அரசு திட்டமிடுகிறது.

ஆனால் இம்மாநாட்டில் 'தமிழீழம்' தான் ஒரே தீர்வு என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி தனது எதிரிகளின் (சீனாபாகிஸ்தான்) காலடியில் ஒரேயடியாக இலங்கை அரசு வீழ்ந்து விட வழியேற்பட்டு விடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வும் இந்திய மத்திய அரசிற்கு இருக்கிறது.

இதனை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வேண்டுகோள் மேலும் உறுதிப்படுத்துகிறது.

இதனையடுத்து இரணங்களை ஆற்றுவதும் பசியைப் போக்குவதும் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதுமே இன்றைய தேவை எனக்கூறும் கருணாநிதி ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (NGO) போல் பேச ஆரம்பித்துள்ளார்.

அத்தோடு தனி ஈழத்திற்கான போராட்டம் கிளர்ச்சி எதுவுமில்லை என்றும் தெளிவாகச் சொல்கிறார்.

ஆகவே டெசோ மாநாட்டின் மூலம் பிறப்புரிமைக் கோட்பாட்டில் உறுதியாகவிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதுவித பலனுமில்லை என்பதே உண்மை.
சரிந்துவரும் மக்கள் ஆதரவினை மீளப் பெறுவதற்கு ஈழமக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை மறுபடியும் தனது கரங்களில் எடுத்துள்ளார் கருணாநிதி.டெசோ வரவேற்புக் குழவில் இருக்கும் இராதகிருஸ்ணன் என்பவர் புலம்பெயர் அமைப்புக்களையும் தனி நபர்களையும் ஈழஆதரவு ஊடகங்களையும் அணுகிக் கொண்டிருக்கிறார்.

கருணாநிதியின் பொறிக்குள் சிக்கி தமிழகத்தில் நிரந்தரமாக இருக்கும் ஆதரவுச் சக்திகளை நாம் இழக்கக்கூடாது.
குருதியில் உறைந்த தேசத்திற்கு புதிய படிப்பினைகள் தேவையில்லை.

 

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....
May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 24, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்