இலங்கையில் அனல்மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசு மாற்றிடங்களை வழங்க முன்வந்த காரணத்தால்தான் 7 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கான உணவு உதவிகள் நிறுத்தப்பட்டதாக உலக உணவு திட்டம் கூறுகிறது.
எந்தவிதமான அழுத்தங்களினாலும் தமது நடவடிக்கை அமையவில்லை என்றும் தம்மிடமுள்ள வளங்கள் மற்றும் மக்களுக்கான தேவைகள் பற்றி ஆராய்ந்து, எங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுவதாகவும் பிபிசி தமிழோசையிடம் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.
தமது சொந்தக் குடிமக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க முன்வருகின்ற போது, அங்கு தமது உதவிகளுக்கு தேவை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் பதில் இயக்குநர் கூறினார்.
பெரும் நிதிநெருக்கடியில் இருக்கின்ற உலக உணவுத் திட்டம் ஆண்டுக்கு ஒருமுறை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடத்தும் மதிப்பீட்டின்படி வடக்கில்தான் தமது உதவிகள் தொடரும் என்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.