தற்போதைய கவர்ச்சி உலகில் அவலம் என கருதப்படும் கொழுத்த (பருமணான) உடல். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பேரழகென போற்றப்பட்டது. செல்வ செழிப்புடனான வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் திகழ்ந்துவந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களையோ வரைபடங்களையோ புரட்டிப்பார்த்தால் அவைகளில் காட்சியளிக்கும் பெண்களும் ஆண்களும் பருத்த உடலமைப்பை கொண்டவர்களாகத்தான் கீறப்பட்டிருப்பார்கள்.
இன்னிலை மாறி, கடந்த 30 ஆண்டுகளாகத்தான் மெல்லிய உடலமைப்புக்கு கலை உலகிலும் சக வாழ்விலும் வரவேற்புகள் அதிகமாயின.
தான் கொண்ட உடல் எடையும் கொழு கொழுத்த உடலும் மகிழ்ச்சியளிக்கிறதா என்று யாரை கேட்டாலும் அவரின் பதில் பெரும்பாலும் இல்லை என்றுதான் எதிரொலிக்கும். இல்லை என்ற பதிலை தொடர்ந்து கொழுப்பை முழுமையாக குறைக்க வழிகளேதுமுண்டா என்ற கேள்வியும் கேட்கச்செய்வார்கள்.
உடலிலுள்ள கொழுப்பின் அளவை முற்றிலும் அழிப்பது பெரிதல்ல, தேவையான அளவினை சீராய் கொண்டிருப்பதுதான் சிறப்பு. இதனை யாரும் பெரிதாய் பொருட்படுத்துவதில்லை.
உடல் கொழுப்பினை குறைப்பதற்கான வழிமுறைகளைக் கொண்ட தொகுப்புகளை தாங்கி வெளிவராத நாளேடுகளும் சஞ்சிகைகளும் இல்லையென்றே கூறலாம். ஆனால், உடம்பில் குறிப்பிட்ட ஓர் அளவிற்கு கொழுப்பு தேவை; கொழு கொழுப்பும் அழகுதான் என்று யாரும் பெரிதாய் குரல் கொடுத்ததில்லை.
நாம் உடலியங்க சக்திகளை கொடுப்பது மட்டுமல்லாது நம்மை சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைத்து உடலின் நீர்ச்சம நிலையை சீராய் வைத்திருக்க உதவுவதும் கொழுப்புதான். அதுமட்டுமின்றி, கருவுறுதிறனை மேன்மையடையச் செய்வது, பசி, மனநிலை ஆகியவற்றையை கட்டி ஆழ்வது போன்ற செயற்பாடுகளுக்கும் கொழுப்பு துணை நிற்கிறது.
உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லையெனில் அது நமதுடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பாதிக்கும்.
இன்றைய நவீன 'அலங்கார' உலகில் மெல்லிய உடலமைப்புடன் குறைந்த உடல்நிறை குறியீட்டு எண்(மி.எம்.ஐ) கொண்டவர்கள்தான் அழகுஇ கவர்ச்சி என கொண்டாடப்படுகிறார்கள். குறைவான உடல் நிறை குறியீட்டு மதிப்பு கொண்டவர்கள் யாவரும் நன் உடல் நலத்தோடு திகழ்வதில்லையென ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
உடல் அழகைவிட உடலின் ஆரோக்கியம் மிக முக்கியம். மெல்லிய உடலுடன் நலம் கெட்டு இருப்பதைவிட கொழு கொழுத்த உடலுடன் நலமுடன் வாழ்வது நல்லது.
நம் உடலில் கொழுப்பு தேங்கியிருக்கும் பகுதியினை பொருத்தமைகிறது அதன் பயனும் பாதிப்பும். கல்லீரலில் இருக்கும் கொழுப்பு ஆபத்தானது அதுவே தொடை பகுதியில் இருக்கும் கொழுப்பு பாதுகாப்பானது. இருக்கவேண்டிய இடத்தில் போதிய அளவு இருந்துவிட்டால் நன்மைதான்.
உடல் எடை குறைப்பதன் விளைவாக உள்ளுறுப்புகளில் அடைக்கப்படும் கொழுப்புகள் நீரிழிவு மற்றும் இருதய பாதிப்புகளின் தூண்டுதல்களாக அமைகிறதென்கிறது ஆய்வு.
ஆக, இப்போதிருக்கும் நம் உடலமைப்பை நேசித்து அதனை நலத்துடன் வைத்துக்கொள்ள முயல்வோம்.
கொழு கொழுப்பும் அழகுதான்.