ரிவர்ஸ் ஒவ் பாபிலோன் என்ற பாடல் பற்றி நண்பர் விபரித்த ஓருநாள் எனக்கு அந்தப்பாடல் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. பாடசாலைக்காலம் முதல் பொனி எம் ஆங்கில இசைப்பாடல் தொகுதியில் இந்தப்பாடலை குழுவாகச்சேர்ந்து பாடும் இசைக்காக விரும்பிக்கேட்டிருக்கிறேன். ஆனால் அதன் உட்பொருளை பிரித்து அறியும் ஆர்வம் இருக்கவில்லை. நண்பர் இது பற்றி எனக்கு விபரித்தார்.
எக்ஸோடஸ் என்ற யூதர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அவர்கள் தாயகம் திரும்புகின்ற பெரும் கதையை படித்திருக்கிறேன். அந்த எக்ஸோடஸ் என்பதுகூட பைபிளில் யூதர்களின் தாயகம் நோக்கிய பயணமாக இருப்பதையும் அந்தச் சொல்லின் விரிவாக்கத்தையும் அவருடன் பல தடவைகள் கதைத்திருக்கிறேன். அவர் அதிகம் அதுபற்றி ஆராய்ந்திருக்கிறார்.
அப்போதுதான் யாழ்ப்பாண 1995 இடம்பெயர்வை ஊடகங்கள் மாஸ் எக்ஸோடஸ் என்று தலைப்பிட்டிருந்ததை நினைவுக்குக்கொண்டு வரக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில் எமது இடம்பெயர்வுகளை தொகுத்துப் பார்க்கவேண்டும். ஆவணப்படுத்த வேண்டும் என்று தொடங்கி ஒரு சுருக்கமான ஆவணப்படுத்தலுக்கு முயல்கின்றேன். ஏன் இதை ஆவணப்படுத்தவேண்டும் என்று நான் நினைத்தேன் என்றால் நமது இடம்பெயர்வுக் காலம் நீண்டது. நீண்டகால இடம்பெயர்வால் மக்கள் சிதறிப்போய் விடுகிறார்கள். நகர வாழ்க்கை விருப்பத்தில் திரும்ப தமது கிராமங்களுக்கு செல்வதில்லை. வெளிநாடு சென்றவர்கள் வெளியேறியவர்கள் மீள தாய்மண் திரும்ப மறக்கிறார்கள். இதனால் இக்கிராமங்கள் கைவிடப்பட்டு விடுகின்றன. சு.வில்வரத்தினத்தின் கவிதையில் சொல்வது போல அவை காற்றுவளிக் கிராமங்களாகி விடுகின்றன.
எனது கிராமத்துக்கு நான் மீளச்சென்று வாழ்ந்து மீளவும் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இடம்பெயர்வுகள் எப்படி எம்மண்ணை அழித்துள்ளது என்பதை கண்கூடாக கண்டுணர்ந்த நிலையில் தாய் மண்ணைவிட்டு வெளியேறிப்போனவர்களுக்கு அவர்களின் இடம்பெயர்வை பதிவுசெய்யவேண்டும் என்பதற்கான முயற்சி இது.
2000 ஆண்டுகள் இடப்பெயர்வின் அவலத்தை அனுபவித்த யூதர்களின் வரலாற்றில் அழியாத அடையாளமாய் அமைந்துவிட்ட 'எக்ஸோடஸ்' போல் தமிழர் வரலாற்றில் அழியாத அடையாளமாய் அமைந்துவிட்டது அக்டோபர் 30...யூதர்களின் வரலாற்றில் 1948ல் இஸ்ரேல் என்ற தாயகம் உருவாகும்வரை அவர்கள் உலகில்; கொடூரமாய் ஒடுக்கப்பட்டார்கள். கிபியில் யூதர்கள் 99 விழுக்காட்டினர் அவர்களின் தாயகத்திலிருந்து ரோமானியர்களால் அகதிகளாக விரட்டப்பட்டனர்.
இது முதல் உலகப் பெரும் இடம்பெயர்வு. அதே போல் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட பேரிடப்பெயர்வின் அடையாளமாய் அமைந்துவிட்டதுதான் 'அக்டோபர் 30...' அக்டோபர் 30.....தமிழர் தாயகவரலாற்றில் மிக முக்கியநாள் இது.... யாழ்ப்பாணம் வலிகாமத்தைவிட்டு ஒட்டு மொத்தமாக 5 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் ஒன்றாய்...பேரவலப்பட்டு இடம்பெயர்ந்து விடுதலைக்கு வலுச்சேர்த்தநாள்.... 1995.
1995 ல் சூரியக்கதிர் மூலம் சிங்களப்படைகள் ஆக்கிரமித்த நடவடிக்கையின்போது இந்தக் பேரவலம் நிகழ்ந்தது. தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இடப்பெயர்வுநாள் அது. இந்த நாளில் தமிழ் மக்கள் அந்தப் பேரவலத்தை மீட்டுப்பார்க்க வேண்டும். விடுதலையின் வலுவை உணரவேண்டும். இங்கு தமிழர் தாயக இடம்பெயர்வுகளை ஒரு தடவை மீட்டிப்பார்ப்போம்.......
தமிழர் தாயகத்தில் தமிழர் இடம்பெயர்வு 1957 ல் அம்பாறை பட்டிப்பளையில் கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின்போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறையினால் அந்த இடப்பெயர்வு நிகழ்ந்தது. அதன்பின் 1990 கள் வரை அம்பாறையில் சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்திய வன்முறைகளாலும், ஸ்ரீலங்காப்படையினர், சிங்கள, முஸ்லீம் ஊர்காவல்படை என்ற காடையர் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், படுகொலைகளாலும்,தமிழ் மக்கள் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்தனர். மட்டக்களப்பில் 1980 களில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகளால் இடப்பெயர்வுகள் நிகழ்ந்தன. அதேபோல் திருக்கோணமலையிலும், சிங்களக்குடியேற்றங்களினாலும், இராணுவ வன் முறைகளினாலும் மக்கள் இடம்பெயர்வுகள் நடந்தன....
இன்னமும் அந்த மக்கள் முழுமையாகத் தம் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியவில்லை. 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமானபோது தென்தமிழீழத்தில் பேரவலமிகு தமிழர் இடப்பெயர்வு இடம்பெற்றது. அம்பாறை முதல் திருக்கோணமலை ஸ்ரீலங்காப் படைகள், முஸ்லீம் காடையர்கள், சிங்களக் காடையர்கள் நடத்திய வன்முறை கொலை வெறியாட்டத்தினால் ஒரு இலட்சம் வரையான மக்கள் தம் உடமைகளை இழந்து உயிர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வட தமிழீழம் நோக்கி பல நூறு மைல்களை கால் நடைப்பயணத்தில் மரணப்பொறியான மணலாறு சிங்கள இராணுவ கேந்திரங்கள் ஊடாக இடம்பெயர்ந்து வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தஞ்சமடைந்தனர். இவர்களின் இடப்பெயர்வு அவலம் மிகப்கொடுமையானது. காடுகளுடாக சிங்களப்படைகளின் நிலைகளுடாக இரவு பகலாக பல நூறு மைல்களை கால்நடையாக கடந்த அந்த அவலத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
வட தமிழீழத்தில் முதல் இடப்பெயர்வு 1984 ல் மணலாறு ஒதியமலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் இராணுவத்தினரால் விரட்டப்பட்டதாகும். ஒதியமலையைத் தவிர ஏனைய இடங்களில் இன்னமும் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.
1987 ல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பினால் மக்கள் இடம்பெயர்வு நிகழ்ந்தது. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் தமிழர் தாயகம் முழுமையிலும் தமிழ் மக்கள் இடப்பெயர்வு நிகழ்ந்தது.
வவுனியாவில் 1990 ல் நொச்சிமோட்டையை ஆக்கிரமிக்க சிங்கள இராணுவம் பூந்தோட்டம இளமருதங்குளம் ஊடாக மேற்கொண்ட பாரிய படைநடவடிக்கையின்போது தமிழர்களின் இடம்பெயர்வு அவலம் ஆரம்பமானது. கண்டிவீதியில் படைகள் தொடர்ந்து மேற்கொண்ட வன்னிவிக்கிரம ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின்போது வவுனியா மாவட்டப்பகுதிகளில் மக்கள் இடப்பெயர்வுகள் நடந்தன. அதேவேளை வவுனியாவின் மேற்கே செட்டிகுளம், பூவரசங்குளம் பகுதிகளில் 1991 ல் படைகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்புநரி ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து மடுவில் தஞ்சமடைந்தனர்.
1997 ல் வவுனியா நொச்சிமோட்டையிலிருந்து சிங்களப்படைகள் மேற்கொண்ட ஜெயசிக்குறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வவுனியாவின் வடபகுதி, வடமேற்குப்பகுதி, முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்குப் பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர்.
முல்லைத்தீவில் 1990 ல் கடல்க்காற்று நடவடிக்கைமூலம் நகரம் சிங்களப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டபோது அது முழுமையிலும் இடம்பெயர்ந்தது.
1999 ல் வவுனியாவின் வடமேற்கில் மேற்கொள்ளப்பட்ட ரணகோச -1 நடவடிக்கையாலும், மக்கள் இடம்பெயர்ந்தனர். 1997 ல் வவுனியா, மன்னார் வீதி எடிபல நடவடிக்கை மூலம் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவேளை அச்சாலையோர கிராமங்கள் யாவும் இடம்பெயர்ந்தன. மன்னாரில் 1991 ல் பச்சைப்பட்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போதும் 1999 ரணகோச -1 முதல் 5 வரையான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின்போதும் மன்னார் மக்கள் இடம்பெயர்ந்து அவலமுற்றனர்.
கிளிநொச்சியில் 1986 ல் ஸ்ரீலங்காப்படைகள் ஆனையிறவிலிருந்து பரந்தனுக்கு முன்னேறியபோது பரந்தனிலிருந்த போதும் கிளிநொச்சியில் படைமுகாம் விரிவாக்கப்பட்டபோதும் கிளிநொச்சி நகரமும், பரந்தனும் இடம்பெயர்ந்தன..........
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் கிளிநொச்சிக்கு மீண்ட மக்கள் 1990 ல் 2ஆம் ஈழப்போரில் கிளிநொச்சி படையினரை மீட்க ஆனையிறவு, சுட்டதீவு பகுதிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படை ஆக்கிரமிப்புகளின்போது கிளிநொச்சி இடம்பெயர்ந்தது. 1991 ல் பூநகரி வலம்புரி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் ஸ்ரீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டபோது அது முழுமையாக இடம்பெயர்ந்தது. 1996 ல் சத்ஜெய மூலம் கிளிநொச்சி நகரம் சிங்களப்படைகளால் ஆக்கிரமிக்கபட்டபோது கிளிநொச்சியில் வளமிகு பகுதிகளைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன்போது சூரியக்கதிர்களால் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த மக்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வு அவலத்தை சந்தித்தனர்.
1996 முதல் 1999 வரை வன்னி சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் குறுகிய காலங்களில் இடம்பெயர்வுகளாகவே மக்களின் வாழ்வு நகர்ந்தது. 1998 ரிவிபலவினால் ஒட்டுசுட்டான் மக்கள் முழுதாக இடம்பெயர்ந்ததையும் குறிப்பிடவேண்டும்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை சிங்களப்படைகளின் ரிவி பல விரிவாக்க நடவடிக்கைகளால் மக்கள் இடம்பெயர்வு அவலம் ஆரம்பமாகின்றது. 1987 ல் வடமராட்சியிலும், அச்சுவேலிப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட லிபரேசன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் பாரிய இடம்பெயர்வு அவலம் நிகழ்ந்தது. இதே ஆண்டில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புத் தாக்குதலின்போது குடாநாடு முழுமையிலும் இடம்பெயர்வு அவலத்தை அனுபவித்தது. இவை குறுகிய கால இடம்பெயர்வுகளாகும். நீண்டகால இடம்பெயர்வு அவலம் இன்னமும் மீள முடியாதவை 1990 ல் தொடங்கின. யாழ் கோட்டைப் படையினரை மீட்க தீவகம் ஊர்காவற்றுறை ஊடாக 1990ல் சிங்களப்படைகள் மேற்கொண்ட திரிவிடபலய படுகொலை, ஆக்கிரமிப்பு நடவடிக்கை 2ஆம் ஈழப்போரின் முதல் இடப்பெயர்வை இரவோடு இராவாக ஏற்படுத்தியது.
இப்போதைய போர்நிறுத்த உடன்பாடே தீவகத்தில் மக்கள் ஓரளவு நிம்மதியான மீள் திரும்பலுக்கு வழிசெய்தது. அதிக தடவைகள் இவர்கள் இடம்பெயர்வு அவலத்தை அனுபவித்தவர்கள். 1991 ல் பல விரிவாக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜெயசக்தி தொடர்ந்த கைகுலுக்கல்,பூமியதிர்ச்சி என்பன வலிகாமமக்களை கட்டம் கட்டமாக இடம்பெயர்த்தியது. அன்று இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் இடம் படை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளதால் இன்னமும் தமது இடங்களுக்கு மீளமுடியாது உள்ளனர்.
1995ல் மேற்கொள்ளப்பட்ட முன்னேறிப்பாய்தல் என்ற வலிகாமம் மேற்கு நடவடிக்கையால் 3 நாட்களில் பலநூறு மக்களின் உயிர்கள் கொடூரமாக பலியெடுக்கப்பட்டன. 2 லட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்தனர். புலிப்பாய்ச்சல் மூலம் விடுதலைப்புலிகள் அதனை முறியடிக்க குறுகிய இடைவெளியில் படைகளால் ஆரம்பிக்கபட்ட சூரியக்கதிர் வரலாற்று முக்கியமான அக்டோபர் 30 பாரிய இடப்பெயர்வு அவலத்தை உருவாக்கியது. அது மானுடத்தை உலுக்கிய இடம்பெயர்வு படை ஆக்கிரமிப்பு தாக்குதல்களால் கொல்லப்பட்ட உறவுகளை அந்தந்த இடங்களிலே விட்டுவிட்டும் புதைத்து விட்டும் இன்னோரன்ன துயரங்களை அனுபவித்த இடம்பெயர்வு அது. குடாநாட்டில் அன்றுடன் இடப்பெயர்வு முடியவில்லை. சூரியக்கதிர்-2 இடப்பெயர்வு தொடர்ந்தது. 2000 ஆண்டுவரை குடாநாட்டில் இடம்பெயர்வு அவலங்கள் தொடர்ந்தன.
போர்நிறுத்த உடன்பாட்டால் இடம்பெயர்ந்த அவலம் 19 மாதங்களாக இல்லை. அதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக தமது இடங்களுக்கு மீள படைகளும் விடவில்லை. உலகில் நீண்டகால அதாவது 2000 ஆண்டு இடப்பெயர்வை அனுபவித்தவர்கள் யூதர்கள். 1948 ல் இஸ்ரேல் என்ற தாயகம் உருவாகும்வரை அவர்கள் உலகில் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். பைபிள்கால பேரிடப்பெயர்வு ஒன்றே 'எக்ஸோடஸ்' என்ற பாரிய இடப்பெயர்வுக்கான ஒரு அடையாளச் சொல்லாக மாறிவிட்டது. அக்டோபர் 30 யாழ்ப்பாண இடப்பெயர்வினையும் யூதர்களின் 'எக்ஸோடஸ்' என்ற பெயராலேயே மனிதாபிமானிகள் குறிப்பிடுகின்றனர்.
பிரபல பொனி-எம் பாடல்களில் Rivers Of Babylon என்ற பைபிள் பாடல் உள்ளது. தயாகமண்ணைவிட்டு இடம்பெயர்ந்த யூதர்கள் பபிலோன் நதிக்கரையில் இருந்து 'எப்படிப் பாடுவோம் இறைவா உன்பாடலை எம் மண்ணைவிட்டுவந்து' என்ற பொருளில் அப்பாடல் அமைகின்றது.
நாடுகடத்தப்பட்டவரின் புலம்பல்
பாபிலோனின் ஆறுகளருகே
அமர்ந்து நாங்கள் சியோனை
நினைந்து அழுதோம்
அங்கிருந்த அலரிச்செடிகள் மீது
எங்கள் யாழ்களை மாட்டிவைத்தோம்
ஏனெனில் அங்கு எங்களைச் சிறையாக்கினோர்
எங்களைப் பாடும்படி கேட்டனர்.
எங்களை கடத்திச்சென்றோர் மகிழ்ச்சிப்பா
இசைக்குமாறு கேட்டனர்.
சியோனின் பாடல்களை எங்களுக்கு
பாடிக்காட்டுங்கள் என்றனர்.
ஆண்டவருக்கு உரித்தாகும் பாடலை
அன்னிய நாட்டில் எங்கனம் பாடுவோம்
யெருசலேமே நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப்போவதாக.
உன்னை நான் நினையாவிடில் எனது மகிழ்ச்சியின்
மகுடமாக
நான் யெருசலேமை கருதாவிடில்
என் நா மேல்வாயோடு
ஒட்டிக்கொள்வதாக
ஆண்டவரே ஏதோமின்
புதல்வருக்கு
எதிராக
யெருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக்கொள்ளும்.
அதை இடியுங்கள்..அடியோடு இடித்துத்தள்ளுங்கள்
என்று
எவ்வாறெல்லாம் சொன்னார்கள்,
பாழாக்கும் நகர் பாபிலோனே
நீ எங்களுக்குச் செய்தவற்றை
உனக்கே திருப்பிச்செய்வோர் பேறுபெற்றோர்
எம்மண்ணைவிட்டு தாய்மண்ணைவிட்டு, எம் தாய்நிலத்தைவிட்டு, எம்பிறப்பிடத்தை விட்டு வந்து இரவல் மண்ணிலிருந்து எப்படி மகிழ்வுறுவோம் நாம் என்று இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த எம்மக்களின் ஆன்மாக்கள் விசும்புகின்றன. பொங்குதமிழின் ..... எமது நிலம் எமக்கு வேண்டும், எமது நிலமே எமக்குவேண்டும் என்றதன் உட்பொருள் இதுதான்.
எப்படி வாழுவர் மகிழ்வுடன் எம்மக்கள் தாய்மண்ணை விட்டுவந்து.........
எனது இந்தப்பதிவு
உண்மையும் உணர்வும் தகவலும் நிறைந்தது. இதில் நடுநிலை மூன்றாவது ஆளாக நிற்றல் என்று எவரும் தேடவேண்டாம்.
இது எங்கள் கிராமங்கள் எமக்காக காத்திருக்கின்றன என்பதை நினைவூட்டுவதற்காக. உலகம் முழுதும் உள்ள தமிழருக்குரிய அவரவர் தாய்நிலத்தின் வேண்டுகை.
- தி. தவபாலன்